திருமண ஆடம்பர செலவுகளை குறைக்கும் ஊரடங்கு திருமணங்கள் – பொதுமக்கள் ஆதரவு

Photo of author

By Parthipan K

திருமண செலவுகளை குறைக்கவா ? இந்த ஊரடங்கு திருமணங்கள்

கொரானா தொற்று பரவலைத் தடுக்க கடந்த மார்ச் மாதத்திலிருந்து பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இப்பொதுமுடக்கத்தின் போது மக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்க திருமண சுப நிகழ்ச்சிகளுக்கு மணமக்களுடன் சில பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதியளிக்கப்பட்து.

இதனால் தமிழ்நாட்டில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பல மணமக்களுக்கு எளிமையான முறையில் வீடுகளிலும், கோவில்களிலும் ஒரு சில நபர்கள் மட்டும் கலந்துக்கொள்ள திருமணம் நடக்கிறது. திருமணம் கலந்து கொள்ள முடியாதோர் வீடியோ அழைப்பில் (Video call)லில் திருமணத்தை பார்த்துவிட்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

எளிமையான முறையில் நடக்கும் இத்திருமணங்களை வரவேற்றாலும், பெண் அல்லது பிள்ளை வீட்டார் திருமண செலவை குறைக்கவும், கல்யாண செலவுகள் பற்றின உறவினர்களின் கேள்விகளிலிருந்து தப்பிக்கவுமே இப்படி எளிமையாக திருமணத்தை நடத்தி தப்பித்துக்கொள்கின்றனர் என ஒரு சில தரப்பினர் கூறியுள்ளனர்.

பொதுவாக “வீட்டைக் கட்டி பார், கல்யாணம் செய்து பார்” என்ற பழமொழிக்கேற்ப தன் பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்யலாம் என்று பெற்றவர்கள் முடிவெடுக்கும்பொழுது அதில் உள்ள ஆனந்தம் தெரியாமல் கல்யாண செலவு என்கிற பாரம் தெரிகிறது. கல்யாணம் முடிந்த பிறகும் அந்த பாரத்தை சுமக்கும் நிலையால் நிம்மதி இழந்து மறுபடியும் இயங்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. ஆனால் இவ்வாறு எளிமையாக நடக்கும் திருமணத்தினால் பெற்றவர்களும் மணமக்களும் கல்யாண சுமையை உடைத்து ஆனந்தம் கொள்கின்றனர்.

உறவினர் வாய்ச்சொல்லுக்கு பயப்படாமல் நிம்மதியான எதிர்கால வாழ்க்கைக்காக நடைபெறும் எளிய திருமணங்கள் வரவேற்கத்தக்கது எனவும் வருங்காலங்களில் இல்லற நிம்மதியை கெடுக்கும் ஆடம்பர செலவுகளை தவிர்த்து எளிமையான முறையில் திருமணங்கள் நடக்கவேண்டும் எனவும் பலர் தெரிவித்துள்ளனர்.

இருந்தும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாள் தவறினாலும் சரி தங்கள் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த காத்திருப்போம் எனவும் ஒரு சில மணமக்கள் உள்ளனர்.

பெண் பார்க்கும் வேளையில் இப்படி ஊரடங்கு அறிவிக்கப்பட்டு காலம் முழுவதும் தங்களுக்கு கல்யாணம் நடைபெறாதா ? கனவாக போகிவிடுமா ? என்ற கவலையுடனும் 90களில் பிறந்த முரட்டு சிங்கிள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.