அண்ணாமலைக்கு ஷாக் கொடுத்த கோவை மக்கள்! வாக்கு எண்ணிக்கையில் தொடர் பின்னடைவு
கோவை மக்களைவை தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார் போட்டியிடுகிறார். அதே போல அதிமுக கூட்டணியின் சார்பில் சிங்கை ராமசந்திரன் களமிறக்கப்பட்டார். இவர்களுக்கு போட்டியாக பாஜகவின் சார்பாக அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை களமிறங்கினார்.
அதிமுக சார்பில் போட்டியிடும் ராமச்சந்திரன் கோவிந்தராசு என்கிற சிங்கை ராமச்சந்திரன் ஆரம்பம் முதலே திமுக மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்து வந்தார். அதே போல பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலை வெற்றிபெற அக்கட்சியினர் தீவிரமாக பிரச்சாரம் செய்தனர். திமுக சார்பில் போட்டியிடும் கணபதி ராஜ்குமாருக்கு ஆதரவாக ஏற்கனவே கொங்கு பகுதியை கவனித்து வந்தவரும், தற்போது சிறையில் இருப்பவருமான செந்தில்பாலாஜி அணி தீவிரமாக வேலை செய்தது.
தற்போது வரை 5 கட்ட வாக்கு எண்ணிக்கையானது முடிந்துள்ளது. அந்தவகையில் இந்த வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தொடர் முன்னிலை வகித்து வருகிறார்.
திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் சுமார் 33997 வாக்குகளுக்கு மேல் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். இவருக்கு அடுத்த அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் 15594 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை வகித்து வருகிறார். பாஜக வேட்பாளர் அண்ணாமலை 26741 வாக்குகளை பெற்று மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். திமுக மற்றும் அதிமுகவை கடுமையாக விமர்சித்து வந்த அண்ணாமலை மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது அக்கட்சியினருக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
பாஜகவின் பலமாக கருதப்பட்ட கொங்கு மண்டலத்தை நம்பி களமிறங்கிய அண்ணாமலைக்கு அத்தொகுதி மக்கள் உரிய ஆதரவு அளிக்கவில்லையோ என்பதையே இந்த முடிவுகள் உணர்த்துகின்றன. இது அவர்களை நம்பி போட்டியிட்ட அண்ணாமலை மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு ஷாக் அளிக்கும் செய்தியாக மாறியுள்ளது.