நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றைய தினம் ஆரம்பமாகி இருக்கிறது. இந்தக் கூட்டத் தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சுமார் 40 மசோதாக்கள் மற்றும் 5 அவசர சட்டங்களை நிறைவேற்றுவது என்று மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. அதே நேரத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு, ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு, தொடர்பான புகார்கள், விவசாயிகளின் போராட்டம் மிக முக்கியமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற விவகாரங்களை எதிர்க்கட்சிகள் கையிலெடுத்து விவாதம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படியான சூழலில், இன்று காலை 11 மணியளவில் ஆரம்பமான மக்களவையில் புதிதாக பொறுப்பேற்று இருக்கின்ற பல அமைச்சர்கள் விவசாயிகளின் பிள்ளைகள் என்று புதிய அமைச்சர்களை உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.அந்த சமயத்தில் பிரதமர் நரேந்திர மோடி பழங்குடி இனத்தை சார்ந்த பெண்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்புபினர்களுக்கும் அமைச்சராக வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது என்று உரையாற்றி இருக்கிறார்.
பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டார்கள். மக்களவை சபாநாயகர் அவர்களை அமைதியாக இருக்குமாறு பலமுறை எச்சரிக்கை செய்தும் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் தொடர்ச்சியாக அமளியில் ஈடுபட்டதன் காரணமாக பிற்பகல் 2 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.