தன்னை நாடி வரும் பக்தர்களின் கஷ்டங்களை தீர்த்து நன்மைகளை வழங்கும் முழு முதற் கடவுளான விநாயகரை வழிபட்டால் கோடி நன்மைகள் உண்டாகும் என்பது ஐதீகம்.எந்த ஒரு சுப காரியங்களை தொடங்குவதற்கு முன்னர் விநாயகரை வழிபடும் வழக்கம் நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வருகிறது.தொடங்கிய காரியத்தை வெற்றியடைய செய்யும் கடவுள் விநாயகர்.இதன் காரணமாகவே எந்த ஒரு செயலையும் தொடங்குவதற்கு முன்னர் விநாயகரை வழிபடுகிறோம்.
இன்று ஆவணி வளர்பிறை சதுர்த்தி தினம்.இந்நாளில் தான் விநாயகப் பெருமான் அவதரித்தார் என்று புராணங்கள் கூறுகிறது.இந்நன்னாளில் விரதம் இருந்து விநாயகருக்கு பூஜை செய்து வழிபட்டால் 1000 கணபதி ஹோமம் செய்த பலன் கிடைக்கப்பெறும் என்பது ஐதீகம்.
விநாயகர் சதுர்த்தி நாளில் காலை நல்ல நேரம் பார்த்து களிமண்ணால் செய்யயப்பட்ட விநாயகரை வாங்கி வந்து அலங்கரித்து நெய்வேத்தியம் படைத்து பூஜை செய்யப்படுவது வழக்கம்.வெள்ளை சுண்டல்,சர்க்கரை பொங்கல்,இலந்தை பழம்,வாழைப்பழம்,இனிப்பு கொழுக்கட்டை,கார கொழுக்கட்டை செய்து விநாயகருக்கு படைத்தது வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.
பொதுவாக விநாயகருக்கு அருகம்புல்லை சூட்டி வழிபடுவதை தான் பார்த்திருப்போம்.ஆனால் சில புஷ்பங்களை விநாயகருக்கு சாற்றி அர்ச்சனை செய்தால் நன்மைகள் பல உண்டாகும்.விநாயகர் சதுர்த்தி அன்று எருக்கம் பூ மற்றும் தும்பை பூவை வைத்து அர்ச்சனை கணபதியே போற்றி என 21 முறை உச்சரிக்க வேண்டும்.இவ்விரு மலர்களும் விநாயகப் பெருமானுக்கு உகந்தவையாகும்.
இது தவிர புன்னை மலர்,மாதுளம் பூ, தாழம்பூ,மந்தாரை மலர்,மகிழம்பூ,ஊமத்தம் பூ,பாதிரி பூ,வெட்டிவேர்,செண்பகப்பூ,மாம்பூ,முல்லைப் பூ, கொன்றைப்பூ,செங்கழுநீர் பூ,செவ்வந்தி,வில்வம்,ஜாதிமல்லி,அரளி,முல்லை பவளமல்லி போன்ற மலர்களையும் விநாயகருக்கு சூட்டி வழிபடலாம்.