அடுத்ததாக ஏற்படும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! புயலாக மாறுமா?

Photo of author

By Sakthi

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பகுதிகளின் மேல் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் இன்று முதல் வரும் 17ஆம் தேதி வரையில் தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானந்த முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

பருவ மழையானது கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி ஆரம்பமானது. அன்று முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாகவும், அதே நேரம் சில சமயங்களில் கனமழையும் பெய்து வருகிறது.

இதனால் தமிழகத்தில் டெல்டா மாவட்ட விவசாயிகள் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள பல விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதோடு தொடர் மழையின் காரணமாக பலர் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. ஆகவே இன்று முதல் கனமழைக்கு வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளது வானிலை ஆய்வு மையம்.

லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் மீனவர்களை எச்சரிக்கை செய்திருக்கிறது.

இதனையடுத்து தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் வரும் 16ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்படும் பட்சத்தில் அது கரையை நோக்கி நகரும்போது வலுப்பெறும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதோடு புயலாக மாறுமா? என்பதை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.