தீனா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். அஜித்துக்கு இப்படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இந்த படத்தில் மலையாள நடிகர் சுரேஷ்கோபி. லைலா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தில்தான் அஜித்தை முதன் முதலாக எல்லோரும் ‘தல’ என அழைக்கும்படி காட்சிகள் வந்தது.
யுவன் சங்கர் ராஜா இசையில் ‘வத்திக்குச்சி பத்திக்காதுடா’, சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல், காதல் வெப்சைட் ஒன்று போன்ற பாடல்கள் ரசிகர்களிடம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்திற்கு பின் ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட பல படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக மாறினார்.
அதேநேரம் அவர் இயக்கிய ஸ்பைடர், தர்பார் போன்ற படங்கள் முருகதாஸுக்கு வெற்றிப்படங்களாக அமையவில்லை. அதன்பின் ஹிந்திக்கு சென்று சல்மான்கானை வைத்து சிக்கந்தர் என்கிற படமும் இயக்கினார். அந்த படமும் ஊத்திகொண்டது. ஒருபக்கம் சிவகார்த்திகேயனை வைத்து மதராஸி படத்தையும் எடுத்து வருகிறார்.
இந்நிலையில், ஒருமுறை தீனா படத்திற்கு பாடல் எழுதிய கவிஞர் வாலி ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘ முருகதாஸ் அப்போது அறிமுக இயக்குனார். என்னை பாட்டு எழுத அழைத்தார்கள் போனேன். கதைப்படி கதாநாயகன் ஒரு ரவுடி. அவன் பாடுவது போல ஒரு பாடல் என சொன்னார் முருகதாஸ். டியூனை சொல்ல ‘வத்திக்குச்சி பத்திக்காதுடா.. யாரும் வந்து உரசுற வரையில’ என எழுதினேன்.
எதுவுமே சொல்லாமல் முருகதாஸ் என்னையே பார்த்துகொண்டிருந்தார். எனக்கு கோபம் வந்துவிட்டது ‘இதான்யா புது டைரக்டருக்கு எல்லாம் நான் பாட்டு எழுது மாட்டேன்னு சொல்றது. பிடிக்கலனா சொல்லு,, வேற எழுதி தரேன். இப்படி எதுவுமே சொல்லாம அமைதியா இருந்தா எப்படி?’ என கேட்க, அவரோ ‘இல்ல சார். இந்த படத்தில் அஜித் வாயில் வத்திகுச்சி வச்சிக்கிட்டு வர மாதிரி காட்சிகள் இருக்கு. அதை நான் உங்களிடம் சொல்லாமலேயே நீங்க அதை பாடல் வரியில கொண்டு வந்துட்டீங்க’ என ஆச்சர்யமாக சொன்னார். இப்படி சில சமயம் நடக்கும்’ என வாலி சொல்லியிருந்தார்.