தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி பறந்த எல்.முருகன் தலைமையிலான நிர்வாகிகள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்தனர். அதன்படி நேற்று பாஜக சார்பில் போட்டியிட உள்ள 17 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியல் நேற்று வெளியானது.
குறிப்பாக மதுரை வடக்கு தொகுதியில் யாரை அறிவிக்கப்போகிறார்கள் என ஆவலுடன் காத்திருந்தனர். காரணம் திமுக சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட சீட் கிடைக்காததால் அதிருப்தி அடைந்த டாக்டர் சரவணன் பாஜகவில் இணைய உள்ளதாகவும், அவருக்கு மதுரை வடக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் அதிருப்தி அடைந்த பாஜகவினர் மதுரை வடக்கு தொகுதி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். பாஜக துணை தலைவர் பேராசரியர் ஸ்ரீனிவாசனுக்கு தான் சீட் கொடுக்க வேண்டுமென தீக்குளிக்கவும் தயாராக இருந்தனர்.
இந்த களோபரங்களுக்கிடையே வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது வானதி சீனிவாசன் என்ற பெயரை தவறாக ஸ்ரீனிவாசன் என புரிந்து கொண்ட மதுரை வடக்கு தொகுதி பாஜகவினர் பட்டாசு வெடித்து, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் இறங்கினர். ஆனால் ஏற்கனவே பாஜக தலைமை திட்டமிட்டிருந்தது போல காலையில் எல்.முருகன் முன்னிலையில் கட்சியில் இணைந்த டாக்டர் சரவணனுக்கு தான் சீட் ஒதுக்கப்பட்டிருந்தது.
சில நிமிட கொண்டாட்டத்திற்கு பிறகே உண்மையை புரிந்து கொண்ட பாஜக தொண்டர்கள் அடச்சே இதுக்கா இவ்வளவு ஆட்டம் போட்டோம் என தலையில் அடித்துக்கொண்ட படியே கிளம்பிச்சென்றனர்.