காய்கறி வியாபாரம் செய்யும் மாணவி! முதல் ரேங்க் எடுத்தும் முள்ளங்கி விற்கும் அவலம்

0
167

மதுரையில் ஆறாம் வகுப்பு படிக்கும் பெற்றோர் ஆதரவு இல்லாத மாணவி ஒருவர் முதல் மதிப்பெண் எடுத்தும் குடும்ப சூழலால் காய்கறி விற்று குடும்பத்தை காப்பாற்றும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டத்திலுள்ள வில்லாபுரம் வேலுப்பிள்ளை தெருவில் வசிப்பவர் தான் மாரியம்மாள். இவரது ஒரே மகளான மீனாவுக்கும் காளிமுத்து என்பவருக்கும் கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு 12 வயதில் முருகேஸ்வரி என்ற பெண் குழந்தையும் 8 வயதில் விக்னேஸ்வரன் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன் மீனா இறந்துவிட்டதால் குழந்தைகளை தற்போது 50 வயதாகும் அவர்களது பாட்டி மாரியம்மாள் பராமரித்து வருகிறார் .

மேலும் தற்போது மீனாவின் கணவர் காளிமுத்து திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.ஆனால் மீனாவின் மறைவிற்கு பிறகு தற்போது வரை தன்னுடைய குழந்தைகளுடன் எந்தவித தொடர்பும் இல்லாமல் திருப்பூரில் தனியாக வசித்து வருகிறார்.இந்நிலையில் கடந்த இரண்டரை வருடங்களாக எந்தவித உதவியும் இல்லாத சூழ்நிலையில் பாட்டியுடன் வசித்து வரும் சிறுமி முருகேஸ்வரி, பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாததால் தற்போது காய்கறி வியாபாரம் செய்து குடும்பத்தை கவனித்து வருகிறார்.

சொந்தமாக வியாபாரம் செய்ய பணமில்லாததால் கடன் வாங்கி வியாபாரம் செய்து அதன் மூலம்  கிடைக்கும் சொற்ப வருமானத்தில் கடனையும் கட்டிவிட்டு மீதியுள்ள பணத்தில் தன்னுடைய குடும்பத்தையும் காப்பாற்றி வருகிறார். ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவியான முருகேஸ்வரி பள்ளியில் முதல் ரேங்க் வாங்கியிருக்கிறார். மேலும் தன்னுடைய அறிவுத் திறமையால் ஆசிரியர்களின் பாராட்டைப் பெற்றவர். 

இதேபோல் அவரது தம்பி விக்னேஸ்வரனும் நன்றாக படிப்பவர் தான். இருந்தபோதிலும் தங்களுடைய குடும்ப சூழல் காரணமாக ஊடரங்கால் தற்போது குடும்பம் சந்தித்து வரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு வரவும், மேலும் தன்னுடைய தம்பியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவுக்கு வந்துள்ளதாக சிறுமி முருகேஸ்வரி கூறியுள்ளார்.

அனைத்து மாணவர்களும் ஆன்லைன் வகுப்பில் கவனம் செலுத்தி கொண்டிருக்கும் நிலையில் முதல் மதிப்பெண் எடுத்தும் முள்ளங்கி விற்கும் அவல நிலைக்கு கொண்டு வந்து விட்டது சிறுமியின் குடும்ப வறுமை.

Previous article6,000 ஊழியர்களை வெளியேற்ற முடிவு! கார் நிறுவனத்தின் திடீர் முடிவால் பணியாளர்கள் அதிர்ச்சி!
Next articleஜூன் 21 நாளை நிகழவிருக்கும் கிரகணம் எந்த வகை சூரிய கிரகணம் என்று தெரியுமா?