ஒருமுறை தடாகத்தில் புஷ்பம் பறிக்க வந்த யானையின் காலை முதலை பிடித்துவிட்டது. யானையின் கண் முன்னே மரணம் தெரிய ஆரம்பித்து விட்டது.
முதலைக்கோ அந்த யானையை கொன்றால் தான் ஆகாரம் என்பதால் விடவேயில்லை. யானைக்கோ தன் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற பயம். போராடி பார்த்த யானை நம்மை காப்பாற்ற அந்த பெருமாளால் தான் முடியும் என நினைத்தது.
யானை தன் அடி வயிற்றில் இருந்து ஆதிமுலமே என்று கத்தியது. அந்த அலறல் சத்தம் கிட்டத்தட்ட விண்ணை தாண்டி ஒலித்தது. இதனை பார்த்த பரமாத்மன் உடனே அந்த யானைக்கு உதவி செய்ய கிளம்பினான்.
பாம்பனையில் இருந்து படாரென எழுந்தான் பரந்தாமன், எழுந்த வேகத்தை பார்த்து கருடாழ்வார் சுதாரித்து ஆயத்தமானான். தன் தோளில் துண்டு போடாமல் பாதுகை அணியாமல் புறப்பட்டான்.
ஒரு குழந்தை அழுதால் அதன் தாய் எப்படி ஓடுவாள், ஒரு கன்று துடித்தால் பசு எப்புடி ஓடும், அதே மாதிரி சுவாமி ஒடி வந்துள்ளார்.யானை கூப்பிட்ட அடுத்த நொடியே வந்து நின்று காப்பாற்றினார் மகாபிரபு.
யானை கூப்பிட்டு வந்த பரந்தாமன் திரௌபதி கூப்பிட்டு ஏன் வரவில்லை என்ற கேள்வி நம் மனதில் எழலாம்.
மகாபாரதத்தில் தர்மன் சூதாடும்போது மனத்திற்குள் வேண்டுதல் ஒன்றை வைத்தான். தானும் தனது சகோதரர்களும் சூதாடும் விஷயம் கிருஷ்ணனுக்கு தெரிந்து விடக்கூடாது என்பதே அது.
தர்மனின் எண்ணத்தை புரிந்து கொண்ட கிருஷ்ணன் சூதாடும் மண்டபத்துக்கு வரவில்லை. ஆனால் அபயம் என்றதும் திரௌபதிக்கு ஆடை கொடுத்து மானம் காத்தான்.
தர்மன் அவ்வாறு வேண்டாமல் இருந்திருந்தால் திரௌபதிக்கு இன்னல் வரும் முன்பே பரந்தாமன் காப்பாற்றி இருப்பான். நாம் என்ன நினைக்கிறோமோ அது தான் நடக்கும் என்பது கதை சொல்லும் நீதி.