குடியுரிமை திருத்த சட்டத்திற்க்கான அவசியம் என்ன ? மலேசியா பிரதமர் கேள்வி

Photo of author

By Parthipan K

இஸ்லாமிய சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும் அவற்றுக்கான தீர்வு குறித்தும் விவாதிப்பதற்காக மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உச்சி மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் இரண்டாம் நாளன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோதே இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்த தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார் பிரதமர் மகாதீர்.

“மதச்சார்பற்ற நாடு என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவில் இஸ்லாமியர்களின் குடியுரிமையைப் பறிக்கும் வகையிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. அதேபோன்றதொரு நடவடிக்கையை இங்கு (மலேசியா) மேற்கொண்டால் என்ன நடக்குமென்பது உங்களுக்குத் தெரியும். அனைவரும் பாதிக்கப்படுவர்,” என்றார் மகாதீர்.

இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் அனைத்துக் குடிமக்களும் இணைந்து வாழ்ந்து வந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், மலேசியாவில் பிற இனத்தவர்களுக்கும் குடியுரிமை வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

“மலேசியாவுக்கு வந்த இந்தியர்களை நாம் ஏற்றுக் கொண்டோம். அதேபோல் சீனர்களையும் ஏற்றுக்கொண்டுள்ள நாம், உரிய வகையில் தகுதி பெறவில்லை என்றாலும் கூட அவர்களுக்குக் குடியுரிமை வழங்கி உள்ளோம். இப்போது அந்த இனங்களைப் பிரதிநிதித்துவம் செய்பவர்கள் மலேசிய அரசிலும் இடம்பெற்றுள்ளனர்.”

“சுமார் 70 ஆண்டுகளாக இந்தியக் குடிமக்கள் எந்தவிதப் பிரச்சனைகளுமின்றி ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் இவ்வாறு சட்டத் திருத்தம் கொண்டுவருவதற்கான அவசியம் என்ன?” என்று மகாதீர் கேள்வி எழுப்பினார்.