மகளிர் தங்களின் கழுத்தில் அணிந்திருக்கும் தங்க நகைகளை பைக்கில் வந்து இளைஞர்கள் பறித்து செல்லும் சம்பவம் சமீபகாலமாகவே தமிழகத்தில் அதிகரித்திருக்கிறது. ஒருபக்கம் தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே போக, மறுபக்கம் செயின் திருட்டு சம்பவங்களும் அதிகரித்துகொண்டே செல்கிறது.
சுலபமாக வந்து பெண்கள் கழுத்தில் அணிந்திருக்கும் தங்க நகைகளை பறித்து செல்கிறார்கள். பெரும்பாலும் இளைஞர்களே இந்த வேலையில் ஈடுபடுகிறார்கள். அதிலும், சாலை மற்றும் தெருக்களில் தனியாக செல்லும் பெண்களை குறி வைத்தே இந்த சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
குற்றம் நடைபெறும் இடங்களில் சிசிவிடி கேமராக்கள் இருந்தால் போலீசார் அடையாளம் காண முடியும். இல்லையென்றால் அவர்களை கண்டுபிடிப்பதே போலீசாருக்கு சவாலாக இருக்கிறது. இதுதான் செயின் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு வசதியாக இருக்கிறது.
சமீபத்தில் கூட சென்னையில் ஒரே நேரத்தில் திருவான்மியூர், பெசண்ட் நகர், கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் ஒரே நேரத்தில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்து 15 சவரனுக்கு மேல் நகைகளை பெண்கள் பறிகொடுத்தனர். இதனையடுத்து தனிப்படை அமைத்து விசாரணையை துவங்கிய போலீசார் இரண்டு பேரை விமானத்தில் வைத்தும், ஒருவரை ரயிலில் வைத்தும் கைது செய்தனர். அதில் ஒருவன் போலீசார் சுட முயற்சி செய்தபோது என்கவுண்டர் செய்யப்பட்டான்.
இந்நிலையில், சென்னை வானகரத்தில் ஒரு அபார்ட்மெண்டில் 10வது மாடியில் தனியாக வசிக்கும் பெண்ணின் வீட்டில் காலிங் பெல்லி அழுத்தி அப்பெண்ணை தாக்கிவிட்டு கழுத்தில் அணிந்திருண்ட்த செயினை வாலிபர் ஒருவர் பறித்து செல்லும் சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசாரின் விசாரணையில் அது சதீஷ்(26) என்பது தெரியவந்தது. இவர் மீது ஏற்கனவே போக்சோ, கொலை முயற்சி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கிறது. அவரை கைது செய்துள்ள போலீசார் கொள்ளை முயற்சி, காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.