ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அடுத்தடுத்து வேட்பாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அதிர்ச்சியளிக்கும் விஷயமாக மாறியுள்ளது.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குசேகரிப்பிற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தங்களுடைய வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின், கமல், சீமான், தினகரன் உள்ளிட்டோர் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். மற்றொரு புறம் வேட்பாளர்களோ களத்தில் இறங்கி கபடி விளையாடுவது, மீன் பொறிப்பது, தோசை சுடுவது என விதவிதமான விஷயங்களை செய்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றனர்.
இதே சமயத்தில் வேட்பாளர்கள் இல்லாமலேயே பிரசாரம் செய்யும் நிலையும் இந்த முறை ஏற்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேளச்சேரி வேட்பாளர் சந்தோஷ்பாபு, அண்ணாநகர் வேட்பாளர் பொன்ராஜ், சேலம் மேற்கு தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் பொன்ராஜ், காங்கிரஸ் ஸ்ரீவில்லிபுத்தூர் வேட்பாளர் மாதவ்ராவ் ஆகியோருக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட வேட்பாளர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருடைய ஆதரவாளர்கள் தொகுதிகளில் வேட்பாளர்கள் சார்பில் வாக்குசேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மன்னார்குடி சட்டமன்ற அமமுக வேட்பாளர் காமராஜ் நெஞ்சுவலி காரணமாக தஞ்சை யில் உள்ள மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையில் அவருக்கு இதயத்தில் 4 இடத்தில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டு, ஆஞ்சியோ சிகிச்சை மூலம் சரி செய்யப்பட்டுள்ளது. தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ள காமராஜ், சில தினங்களுக்குப் பிறகே வீடு திரும்ப உள்ளார். இதனால் தொகுதியில் வாக்கு சேகரிக்க ஆள் இல்லாத நிலை உருவானது.
அப்பா மருத்துவமனையில் இருப்பதால் அவருக்கு காமராஜ் மகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவக் கல்லூரி மாணவரான ஜெயச்சந்திரன் வீடு வீடாக சென்று அப்பாவிற்காக வாக்கு சேகரித்து வருகிறார். ஆரத்தி எடுத்து அப்பகுதி மக்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.