சரணடைவது என்ற பேச்சுக்கே இடமில்லை! கெத்து காட்டும் உக்ரைன்!

Photo of author

By Sakthi

உக்ரைன் மீதான ரஷ்யாவின் கடுமையான தாக்குதல் 26 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக துறைமுக நகரமான மரியுபோல் நகரை சுற்றி வளைத்து கடுமையான தாக்குதலை ரஷ்யப் படைகள் நிகழ்த்தி வருகின்றன.

சூப்பர் சோனிக் ஏவுகணை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்துவதால் அந்த நகரம் சீர்குலைந்திருக்கிறது. பொதுமக்களை தாக்க மாட்டோம் என்று தெரிவித்த ரஷ்ய படைகள் தற்சமயம் பொது மக்களையும் கொன்று குவித்து வருகிறது. அதோடு பொது மக்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் திணறி வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில்தான் உக்ரைன் ராணுவ வீரர்கள் மரியுபோல் நகரில் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடைய வேண்டும் இல்லையென்றால் பேரழிவை சந்திக்க நேரிடுமென்று ரஷ்ய படைகள் எச்சரித்திருக்கிறது.

ஆனாலும் நாங்கள் சரணடைய மாட்டோம் என்று உக்ரைன் நாட்டின் துணை பிரதமர் தெரிவித்திருக்கிறார். தொடர் போர் காரணமாக, பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதிப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

ஆயுதங்களைக் கீழே போடுவது தொடர்பாக எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை, இதுதொடர்பாக ஏற்கனவே நாங்கள் ரஷ்யாவிற்கு தகவல் தெரிவித்திருக்கிறோம் என்றும், உக்ரைன் துணை பிரதமர் தெரிவித்திருக்கிறார்.