மாஸ்டர் படக்குழு வெளியிட்ட புதிய அறிவிப்பு
அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற தொழில்கள் அனைத்தும் முடங்கியுள்ளது. இதில் திரைப்படத் துறையும் அடங்கும்.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழ் திரையுலகில் இந்த மாதம் வெளியாக வேண்டிய பல படங்கள் வெளியாவதில் கடும் பிரச்சினையை சந்தித்து வருகின்றன. இதில் குறிப்பாக தமிழ் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படமும் அடங்கும்.
இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க நடிகர் விஜய் நடித்துள்ளார். இவருடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், ரம்யா சுப்ரமணியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதனையடுத்து இப்படம் இந்த மாதம் 9 ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. தற்போதைய நிலையில் மாஸ்டர் படத்தின் வெளியீடு விஜய் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் புதிய அப்டேட்டாக மாஸ்டர் படத்தை தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான வேலைகளை வரும் மே 3 ஆம் தேதிக்கு பிறகு தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.