அந்த செயலுக்காக இன்னும் யாரும் என்னை மன்னிக்கவில்லை:மனம் திறந்த மெக்ராத் !
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் 2003 ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சச்சினை அவுட் ஆக்கியது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ சேதங்களுக்கு உதவிடும் வகையில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் தலைமையில் கிரிக்கெட் போட்டி நடக்க இருக்கிறது. இதில் பாண்டிங் தலைமையேற்கும் அணிக்கு இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் அவர் காலத்தைய ஜாம்பவான் பவுலர் க்ளன் மெக்ராத்தும் இடம்பெற்றுள்ளார்.
மெக்ராத் சச்சின் கிரிக்கெட் விளையாடிய காலத்தில் அவருக்கு சரியான அழுத்தம் கொடுத்த பந்துவீச்சாளர்களில் ஒருவர். அவரின் பந்துவீச்சை எவ்வளவோ முறை துவம்சம் செய்துள்ள சச்சின், அதேப்போல தனது விக்கெட்டையும் இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் முக்கியமான ஒரு போட்டி என்றால் 2003 ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப் போட்டி.
அந்த தொடர் முழுவதும் அசுர பலத்தில் இருந்த இந்திய அணி இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதியது. அதில் முதலில் பேட் செய்த ஆஸி 360 ரன்களை இலக்காக நியமித்தது. அந்த காலகட்டத்தில் அது எட்ட முடியாத ஸ்கோர். ஆனால் சச்சினை பெரிதும் நம்பியிருந்தது இந்திய அணி. ஆனால் முதல் ஓவரிலேயே மெகராத் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார் சச்சின்.
இந்நிகழ்ச்சியை தற்போது நினைவு கூர்ந்துள்ள மெக்ராத் ‘அந்த விக்கெட்டை நான் எடுத்ததற்காக எனக்கு இன்னும் இந்தியர்கள் மத்தியில் மன்னிப்புக் கிடைக்கவில்லை. இப்போது நான் இந்தியாவில் தான் அதிகமாக வசிக்கிறேன்.’ எனக் கூறி மனம்திறந்துள்ளார்.