மக்களே இல்லாத மருத்துவ முகாம்! அதிருப்தியில் நிகழ்ச்சியை ரத்து செய்த அமைச்சர்!
மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு மருத்துவ முகாமில் மக்கள் யாரும் வராததால் அமைச்சர் அதிருப்தி அடைந்து ரத்து செய்துவிட்டு கிளம்பினார்.
தமிழகத்தில் தற்போது புதுவகையான வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி உள்ளது. இதன் காரணமாக அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் சளி, இருமலுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்தது. இதை தடுப்பதற்கு தமிழக சுகாதாரத்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி தமிழக சுகாதாரத்துறை அறிவுரையின்படி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இது போன்ற ஒரு சிறப்பு மருத்துவ முகாம் திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயிலில் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த முகாமை அமைச்சர் நாசர் தொடங்கி வைப்பதாக ஏற்கனவே கூறப்பட்டிருந்தது. இதனால் முகாம் நடைபெறும் இடத்திற்கு அமைச்சர் நாசர் துவங்கி வைப்பதற்காக வருகை புரிந்தார். ஆனால் அப்போது அங்கு மக்கள் யாரும் இல்லாமல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மட்டுமே அமர்ந்து இருந்தனர்.
பொதுமக்கள் யாரும் சிறப்பு மருத்துவ முகாமிற்கு வராததால் அமைச்சர் நாசர் கடும் அதிருப்தியை அடைந்தார். இதையடுத்து அவர் காரில் இருந்தபடியே அதிகாரிகள், திமுக கவுன்சிலர்கள், நிர்வாகிகளை அழைத்து மக்கள் ஏன் மருத்துவ முகாமிற்கு வருகை புரியவில்லை என கடுமையான முறையில் கண்டனம் தெரிவித்தார். மக்களே யாரும் வராத சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் ரத்து செய்வதாக கூறினார்.
நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு அமைச்சர் நாசர் அங்கிருந்து தனது காரில் புறப்பட்டு சென்றார்.