தீபாவளியை முன்னிட்டு சென்னையில் பணிபுரிவோர் தங்கள் குடும்பங்களுடன் சொந்த ஊர்களுக்கு சென்று வரும் நிலையில் ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் மிகுந்த கூட்ட நெரிசலாக காணப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மெட்ரோ நிர்வாகம் இன்று இரவு 12 மணி வரை மெட்ரோ சேவை இருக்கும் என்று அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், தீபாவளி பண்டிகையை தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்ட நிலையில் சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக இன்று மெட்ரோ ரயில் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் மெட்ரோ ரயில் சேவை காலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை பச்சை வழித்தடத்தில் புரட்சித்தலைவர் டாக்டர் எம் ஜி ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நீல வழித்தடத்தில் வண்ணாரப்பேட்டை மெட்ரோ முதல் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இடையே மூன்று நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதே போல், காலை 5 மணி முதல் 8 மணி வரை மற்றும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 12 மணி வரை பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடத்தில் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை பத்து நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும், மதியம் 12 மணி முதல் இரவை எட்டு மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்றும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் பெற்றோரைகள் இயக்கப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.