எம்ஜிஆர் ஜெயலலிதா கையெழுத்து செல்லாது! ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் குமுறல்!!
அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என எடப்பாடி தரப்பினர் கூறி வந்த நிலையில், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பன்னீர்செல்வம் தரப்பினர் பேசிவந்த சூழ்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதினோராம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று அதில் அவர் கட்சியின் இடைக்கால பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை ஏற்க மனம் இல்லாமல் பலமுறை நீதிமன்றத்தின் கதவுகளை தட்டியபோது அதற்கு தோல்வியே பரிசாக பன்னீருக்கு கிடைத்தது.
இந்த நிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முறைப்படி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் தன்னுடைய இறுதி கட்ட முயற்சியாக நீதிமன்றத்தின் கதவுகளை மீண்டும் தட்டியுள்ளார் பன்னீர்செல்வம், அதிமுகவின் முழு கட்டுபாடும் எடப்பாடியின் கைகளுக்கு வந்து விட்டதை உணர்த்தும் விதமாக கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில் எடப்பாடி தரப்பு தயாராகி வருகிறது.
தமிழகம் முழுவதும் புதிய உறுப்பினர்கள் மற்றும் ஏற்கனவே உள்ள உறுப்பினர்களுக்கு உரிமை சீட்டு வழங்கும் போது அந்த அட்டையில் எடப்பாடி பழனிசாமியின் கையொப்பம் இருந்தால் மட்டுமே எதிர் காலத்தில் கட்சி பதவிகள், எம்எல்ஏ, எம்பி, மற்றும் கட்சியின் உயர் பதவிகள் கிடைக்கும் என அதிமுக முன்னாள் எம்எல்ஏவும் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி மோகன் நேற்று கட்சி கூட்டத்தில் தெரிவித்துள்ள கருத்துக்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
எடப்பாடியின் ஆதரவாளர் தூசி மோகன் தெரிவித்த இந்த கருத்துக்கு, இதற்கு மேலும் பொறுக்கலாமா திருச்சி அழைக்குது புறப்படலாமா என அதிமுக தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் அறிக்கை விடுத்துள்ளார் மருது அழகுராஜ். இந்நிலையில் வரும் இருபத்தி நான்காம் தேதி திருச்சியில் ஓபிஎஸ் தலைமையில் அவரது ஆதரவாளர்களை அழைத்து மாநாடு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.