தமிழக அரசின் வீடு தேடி வரும் சத்துணவு திட்டம்- பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு
கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் தொடர்ந்து மூடி இருக்கின்றன.இந்நிலையில் தான் 2 வயது முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் நலன் கருதி மதிய உணவை சத்துணவு மையங்களில் சமைத்து அதை அவர்களின் வீடுகளுக்கே எடுத்து சென்று வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் ஆரம்பத்தில் நீதிக்கட்சி ஆட்சியின் போது சென்னையின் சில பகுதிகளில் மதிய உணவு திட்டம் அறிமுகபடுத்தப்பட்டது.அதன்பிறகு காமராஜர் முதல்வராக இருந்த காலத்தில் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் தமிழகம் முழுவதுமுள்ள பள்ளிகளில் இலவச மதிய உணவு திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.அதன் பின்னர் அதிமுகவின் எம்ஜிஆரின் ஆட்சிகாலத்தில் இது சத்துணவு திட்டமாக மாறியது.பின்னர் ஆட்சிக்கு வந்த திமுக சத்துணவுடன் முட்டை வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வந்தது.பின்னர் ஆட்சிக்கு வந்த அதிமுக சத்துணவில் சில புதிய உணவு வகைகளை அறிமுகம் செய்தது.
இவ்வாறு ஆரம்ப காலம் முதல் தற்போது வரை இந்த மதிய உணவு திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் தான் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது.இதனால் குழந்தைகளுக்கு வழங்கி வந்த மதிய உணவும் நிறுத்தப்பட்டது.இதற்கு பதிலாக இந்த ஊரடங்கு காலத்தில் மாணவர்கள் அனைவருக்கும் முட்டைகள் மற்றும் சீருடைகள் அனைத்தையும் அவ்வப்போது மொத்தமாக பள்ளிகள் சார்பாக வழங்கப்பட்டது.
கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையின்றி தவிக்கும் ஏழை மக்கள் அன்றாட உணவுக்கே கஷ்டப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் இந்த சூழலை கருத்தில் கொண்டு “சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்ஷன் குரூப்” என்ற அமைப்பு ஏற்கனவே வழங்கி வந்த சத்துணவை தவறாமல் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது, மீண்டும் அங்கன்வாடி மையங்களை திறப்பது குறித்து கலந்தாலோசிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தி இந்த வழக்கை ஒத்திவைத்தது.அதன் பின்னர் இந்த வழக்கானது விசாரணைக்கு வந்த போது,2 வயது முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சத்துணவு மையங்களில் மதிய உணவு சமைத்து அதை அவர்களின் வீடுகளுக்கு சென்று வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.
மேலும் இது குறித்து தமிழக அரசு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது என்றும்,அதுமட்டுமல்லாமல் இந்த திட்டமானது 15 நாட்களுக்குள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் அரசு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.