விமர்சனம் செய்தால் பதிலடி கொடுக்கப்படும்: கமல்-ரஜினிக்கு அமைச்சர் ஜெயகுமார் எச்சரிக்கை
கடந்த ஞாயிறு அன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆட்சி குறித்து அதிசயம்-அற்புதம் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி ரஜினி கூறிய கருத்து தீயாய் பற்றிக்கொண்டு கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. இன்னும் ஒருசில நாட்களுக்கு ஊடகங்களுக்கு தீனியாக இந்த விஷயம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார், ‘ரஜினி சொல்லும் அதிசயம் தமிழகத்தில் நடக்க வாய்ப்பு இல்லை என்றும், மக்களுக்கு நல்லது செய்த பின்னர் பதவிக்கு வரவேண்டும் என்றும், மற்றவர்கள் மீது கல்லெறிந்து பதவியை பெற நினைக்க கூடாது என்றும் கூறினார். மேலும் தமிழகத்தில் தற்போது சிறப்பான ஒரு அரசு நடைபெற்று வருவதாகவும், அந்த அரசை விமர்சனம் செய்யக்கூடாது என்றும் கூறிய அமைச்சர் ஜெயகுமார், மீறி விமர்சனம் செய்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் கூறினார்.
மேலும் தமிழகத்தில் அரசியலில் ஈடுபட்டு அரியணை ஏற ரஜினி கமல் விஜய் என யாராக இருந்தாலும் சரி அனைவருக்கும் ஆசை இருக்கும் என்றும், அதனை தவறு என்று சொல்ல முடியாது என்றும் ஆனால் அதே நேரத்தில் எங்கள் மீது கல்லெறிந்தால் காயம் எங்களுக்கு இல்லை, அவர்களுக்குத்தான் ஏற்படும் என்றும் அமைச்சர் ஜெயகுமார் எச்சரித்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியில் இருந்து அனைத்து முக்கிய அதிமுக தலைவர்களும், பாஜகவினர்களும் தொடர்ந்து ரஜினியை விமர்சனம் செய்து கொண்டிருக்கும் நிலையில் வழக்கம்போல் ரஜினிகாந்த் எந்தவித பதிலும் கூறாமல் ‘தர்பார்’ டப்பிங் பணியில் உள்ளார் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது