சிவகாசியில் அதிநவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய 108 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடக்கி வைத்தார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை ஆம்புலன்ஸ் மூலம் தான் மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர்.
விருதுநகர் மாவட்டம் முழுவதும் தற்போது வரை 18 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயங்கி வருகிறது. கொரோனா தொற்று சிகிச்சைக்காக அதிக அளவில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தேவைப்படுவதால் இந்த சேவையை விரிவுபடுத்த அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நடவடிக்கை எடுத்துள்ளார். இந்நிலையில், சிவகாசியில் அதிநவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய 108 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி இன்று காலை கொடி அசைத்து தொடக்கி வைத்தார்.
2 பெரிய ஆக்சிஜன் சிலிண்டர்கள், உயிர் காக்கும் வென்டிலேட்டர், மாரடைப்பு ஏற்படும் போது உயிர்காக்கும் மருத்துவ உபகரனங்கள், அனைத்து உயிர் காக்கும் மருந்துகள், பயிற்சி பெற்ற மருத்துவ பணியாளர்கள் மற்றும் அனைத்து அதிநவீன மருத்துவ வசதிகளும் இந்த வாகனத்தில் உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆம்புலன்ஸ் வாகனங்கள் தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் கண்ணன், சுகாதாரதுறை இணை இயக்குநர் மனோகரன், துணை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார், தாசில்தார் வெங்கடேசன், டாக்டர் அய்யனார், அதிமுக மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் விஜய்ஆனந்த், நகர செயலாளர்கள் அசன்பதூரூதீன், பொன்சக்திவேல், மாவட்ட மாணவரணி செயலாளர் நல்லதம்பி, மாவட்ட சிறுபாண்மையினர் அணி செயலாளர் செய்யது இப்ராஹீம், சாத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி மற்றும் அரசு அதிகாரிகள், அதிமுக நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.