சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் இருக்கின்ற நோய்த்தொற்று வார்டை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, உள்ளிட்டோர் ஆய்வு செய்தார்கள். அந்த சமயத்தில் மக்கள் நல்வாழ்வு துறை முதன்மைச் செயலாளர் மருத்துவர் ராதாகிருஷ்ணன் மருத்துவமனை டீன் மருத்துவர் ஜெயந்தி, உள்ளிட்டோர் உடன் இருந்தார்கள். அதன்பிறகு அமைச்சர் சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்திருக்கிறார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது, நாட்டில் இதுவரையில் 21 பேர் ஒமிக்ரான் தோற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதன் காரணமாக 11 ஆபத்தான நாடுகளில் இருந்து விமானம் மூலமாக தமிழ்நாடு வரும் எல்லோரையும் தீவிரக் கண்காணிப்பில் வைத்து பரிசோதனை செய்து வருகின்றோம். இதுவரையில் வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வந்து நோய்தொற்று கண்டறியப்பட்ட 6 பேருக்கும் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு இல்லை என்று தெரிவித்து இருக்கிறார்.
அவர்களுக்கு சாதாரண டெல்டா வகை பாதிப்புதான் இருக்கிறது, இதில் 4 பேர் கிண்டி கிங் மருத்துவமனையிலும், 2 பேர் நாகர்கோவில் அரசு மருத்துவமனையிலும், சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதோடு இன்னொருவருக்கு பரிசோதனை செய்ததில் எந்தவிதமான அறிகுறியும் இல்லாததால் அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறோம். நோய் தொற்று பாதிப்பு உண்டானவர்களின் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். அதோடு எல்லா அரசு மருத்துவமனைகளிலும் ஒமிக்ரான் வைரசுக்கு சிறப்பு வார்டுகள் திறக்கப்பட்டிருக்கின்றன என்று தெரிவித்திருக்கிறார். நாட்டிலேயே தமிழகத்தில் தான் அரசு மருத்துவமனைகளில் 12 பகுதிகளில் நோய் தொற்றிலிருந்து உரு மாறுகின்ற வைரஸ்களை கண்டுபிடிக்கும் ஆய்வகம் செயல்பட ஆரம்பித்திருக்கிறது. தமிழ்நாட்டிற்கு இதுவரையில் ஆபத்தான நாடுகளிலிருந்து 28 விமானங்கள் மூலமாக வந்த 4249 பேருக்கும் ஆபத்தில்லாத நாடுகளிலிருந்து வந்த 142 விமானங்களில் தானாய் 2% நபர்கள் என்ற அடிப்படையிலும் 650 பேர் என்று ஒட்டுமொத்தமாக 5858 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது என கூறியிருக்கிறார்.
ரஷ்யா, துருக்கி, உள்பட குறைவான தடுப்பூசி போட்டுக் கொண்ட நாடுகளில் அதிகமான உயிரிழப்பு உண்டாகியிருக்கிறது. இங்கிலாந்து, சிங்கப்பூர், உள்ளிட்ட அதிகமான தடுப்பூசி போட்டுக் கொண்ட நாடுகளில் நோய் தொற்று எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் உயிர் இழப்பு என்பது குறைந்த அளவில்தான் இருக்கிறது. ராணிப்பேட்டை, வேலூர், மயிலாடுதுறை, உள்ளிட்ட மாவட்டங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் 100 சதவீத தடுப்பூசி செலுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறியிருக்கிறார்.