வள்ளுவர் நாத்திகரா? அமைச்சர் பாண்டியராஜன் அதிரடி கருத்து!
திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை கூட யாரும் இந்த அளவு ஆய்வு செய்திருக்க மாட்டார்கள். அதைவிடுத்து வள்ளுவர் எந்த சமயத்தை சேர்ந்தவர்? எந்த மதத்தை சேர்ந்தவர்? அவர் நாத்திகரா? ஆத்திகரா? வள்ளுவரை தமிழராக மட்டுமே பார்க்கின்றோம் என திராவிட அபிமானிகள் ஆழ்ந்த ஆய்வில் உள்ளனர். இந்த ஆய்வை அவர் எழுதிய திருக்குறளில் காண்பித்திருந்தால் இந்நேரம் நாடு சுபிட்சன் அடைந்திருக்கும்
இந்த நிலையில் வள்ளுவர் நாத்திகராக இருக்க வாய்ப்பே இல்லை என்று தமிழக அமைச்சர் பாண்டியராஜன் அவர்கள் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டில் கூறியிருப்பதாவது: வள்ளுவருக்கு முதல் வடிவம் தந்தவர் பிரிட்டிஷ் அரசு Mint தலைவரான எல்லிஸ் பிரபு 1800களில்! தங்க நாணயத்தில் வார்த்தெடுக்கப்பட்ட இந்த தியான உருவம் சமணத்துறவியாகவோ, சைவ/வைணவ ஞானியாகவோ இருக்கலாமே தவிர, கடவுள் வாழ்த்து படைத்த தெய்வப்புலவர் நாத்திகராக இருக்க வாய்ப்பே இல்லை!
அமைச்சரின் இந்த டுவீட்டுக்கு பதில் அளித்துள்ள ஒரு டுவிட்டர் பயனாளி, ‘எல்லீஸ் அவர்கள் வெளியிட்ட நாணயத்தில் வள்ளுவரின் உருவம் முத்துக்குடையின் கீழ் அமர்ந்த சமண துறவியாகவே காட்டப்பட்டு உள்ளதாகவும், அவர் சமணர் என்பதை பல ஆய்வாளர்களும் ஏற்று கொண்டும் உள்ளார்கள் என்றும் கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்னொரு டுவிட்டர் பயனாளி, ‘திருவள்ளுவரின் மனைவி பெயர் வாசுகி என்றும், பாற்கடலை கடைய மத்தாக மலையும் கயிறாக இருந்த பாம்பின் பெயர்தான் வாசுகி என்றும், எனவே வாசுகி இந்து என்றால் வள்ளுவரும் இந்துதான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
திருவள்ளுவர் குறித்த இந்த சர்ச்சைக்கு முடிவே இல்லையா? என்பதுதான் பொதுமக்களின் கேள்வியாக உள்ளது