அமைச்சரின் பாதுகாப்புக்காக சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகி 5 பேர் படுகாயம்!

Photo of author

By Sakthi

தமிழகத்தில் சட்டத்துறை அமைச்சரின் காவல்துறை பாதுகாப்பு வாகனம் விபத்துக்குள்ளாகி அதில் 5 காவல்துறையினர் காயம் அடைந்து இருக்கிறார்கள்.

நேற்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சென்னையிலிருந்து மதுரைக்கு விமானம் மூலமாக புறப்பட்டார். மதுரை விமான நிலையத்தில் இருந்து அமைச்சர் ரகுபதி அவர்களை அழைத்துச் செல்வதற்காக புதுக்கோட்டையிலிருந்து காவல்துறை பாதுகாப்பு வாகனம் சென்றது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிறுகூடல்பட்டி விளக்கு ரோடு பகுதியில் வாகனம் சென்று கொண்டிருந்த சமயத்தில் சாலையின் குறுக்கே வந்த மாட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பாதுகாப்பு வாகனம் சாலை அருகில் இருந்த பள்ளத்தாக்கில் தலைகீழாக கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காவல்துறை அதிகாரி சிவகுரு, துணை ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் ,தலைமை காவலர் குணசேகரன், விக்னேஷ், கருப்பையா, உள்ளிட்டோரும் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீழசேவல்பட்டி காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சை வழங்கி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இதனை தொடர்ந்து 5 காவல்துறையினரும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுதொடர்பாக தகவல் அறிந்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுவரும் காவலர்களை சந்தித்து அவர்களுடைய உடல் நிலை தொடர்பாக மருத்துவரிடம் கேட்டு அறிந்திருக்கிறார். இந்த விபத்து தொடர்பாக கீழசேவல்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

சமீபத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் மதுரை விமான நிலைய தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஓட்டுநர் உள்ளிட்டோர் காயமின்றி உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.