முருகப்பெருமானின் பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சொன்ன அமைச்சர் சேகர்பாபு!

Photo of author

By Sakthi

திமுக ஆன்மீகத்திற்கும் இந்து மதத்திற்கும் எதிரான கட்சி என்ற தோற்றம் உருவாகி வந்த சூழ்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றி அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக முடிசூடினார்.

அதன் பின்னர் இதற்கு முன்பாக திமுகவிற்கு இருந்த இந்து மதத்திற்கு எதிரான கட்சி திமுக என்ற களங்கத்தை துடைக்கும் வேலையில் முதல் வேலையாக இறங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின். அதனடிப்படையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை உடனடியாக செயல்படுத்தினார். அதோடு இந்து சமய அறநிலையத் துறை சார்பாக பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது தமிழக அரசு.

கோவில் நிலங்களை ஆக்கிரமித்து வைத்திருப்பவர்கள் இடமிருந்து அந்த நிலங்களை மீட்டு மீண்டும் அந்தந்த கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பது மற்றும் பயன்படாமல் இருக்கும் கோவில் நகைகளை தங்க கட்டிகளாக உருக்கி அதனை வங்கிகளில் வைத்து அதன் மூலமாக வரும் வருவாயை அந்தந்த கோவில்களின் பராமரிப்பு பணிகளுக்கு செலவிடுவது, உள்ளிட்ட பணிகளை அறநிலை துறை சார்பாக மேற்கொண்டு வருகிறது தமிழக அரசு.

அத்துடன் அறநிலையத் துறை அமைச்சராக இருக்கக் கூடிய சேகர்பாபு அவர் செயல்படும் விதம் காரணமாக, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களிடம் பலமுறை பாராட்டு பெற்றிருக்கிறார்.

இந்தநிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் ஒருங்கிணைந்த பெருந்திட்டம் செயல்படுத்துவது குறித்த ஆய்வு கூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கின்ற இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்றையதினம் நடந்திருக்கிறது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றதாக தெரிகிறது.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் அடிப்படையில் மானியக் கோரிக்கைகளின் சமயத்தில் துறைவாரியாக அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் படிப்படியாக நிறைவேற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில் தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற ஆலயமான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

கோவில்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது மற்றும் தங்கும் விடுதிகள், அன்னதான கூடம் முடி காணிக்கை செலுத்தும் இடம், வியாபாரக் கடைகள், தீயணைப்பு வாகனம் நிறுத்தும் இடம், அவசர ஊர்தி, யானைகள் பராமரிப்பு கொட்டகை, வாகனம் நிறுத்துமிடம், உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு விவாதிக்கப்பட்டது என கூறியிருக்கிறார்.

அங்கப்பிரதட்சணம் செய்யும் பக்தர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கீடு செய்வது குறித்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நீண்ட நேரம் காத்திருக்காமல் திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் இருப்பதைப்போல குறிப்பிட்ட நேரம் ஒதுக்கீடு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக சொல்லியிருக்கிறார் அமைச்சர் சேகர் பாபு.

கோயிலை சுற்றி இருக்கக்கூடிய எந்த இடத்தில் நின்று பார்த்தாலும் ராஜகோபுரம் தெரியும் அளவிற்கு கட்டிடங்கள் கட்டுவது என்று முடிவு மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. அன்னதான கூடம் கீழ்த்தளம், முதல் தளம் என்று ஆயிரம் பேர் ஒரே சமயத்தில் உணவருந்தும் அளவிற்கு திட்டங்கள் தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்திருக்கின்றனர். பக்தர்கள் காத்திருக்கும் அறையில் தொலைக்காட்சி, கழிவறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும் அர்ச்சகர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்திருக்கிறார்.

அதோடு அவர்களுக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கீடு செய்யப்படும். கோவிலை சுற்றி இருக்கக் கூடிய பனை பொருட்கள், கடல்சார் பொருட்கள், விற்பனை செய்யும் கடைகள் தற்சமயம் இருக்கின்ற கடைகளை விட அதிகளவில் விற்பனை கடைகள் அமைக்கப்படும் என்று தெரிவித்ததோடு, 300 கோடி ரூபாய் செலவில் நடக்க இருக்கும் இந்த ஒருங்கிணைந்த திட்ட பணிகள் தொடங்கப்பட்டு இரண்டு வருடங்களுக்கு முடிக்கப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று பேசியிருக்கிறார் அமைச்சர் சேகர்பாபு.

இந்தக் கூட்டத்தில் சுற்றுலா பயன்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், ஆணையர் ஜி குமரகுருபரன், கூடுதல் ஆணையர் திருமகள், இணை ஆணையர் வான்மதி, திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர், செயல் அலுவலர் அன்புமணி மற்றும் ஹெச் சி எல் நிறுவனத்தினர் உட்பட பலரும் பங்கேற்றார்கள் என்று சொல்லப்படுகிறது.