தற்போது பொறுப்பேற்று இருக்கக்கூடிய ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு இந்து சமய அறநிலையத் துறையில் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் பலர் அதிர்ச்சிக்கும் ஆளாகி இருக்கிறார்கள், ஒரு சிலர் மகிழ்ச்சியும் அடைந்து இருக்கிறார்கள்.
அதிலும் கோவில் நிலங்களை ஆக்கிரமித்து வைத்திருப்பவர்கள் சற்று நடுநடுங்கிப் போய் தான் இருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.
இந்த சூழ்நிலையில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோவிலுக்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், போன்ற பல பகுதிகளில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருக்கின்றன. இதில் ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துக்களை மீட்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து சென்னை கீழ்ப்பாக்கத்தில் பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறநிலையத்துறை ஆணையர் மற்றும் செயலாளர், இணை ஆணையர், உள்ளிட்டோரின் உதவியுடன் நிலங்கள் மீட்கப்பட்டு இருக்கின்றது. தற்போதைய மீட்பு மதிப்பீடு ஆயிரம் கோடியைத் தாண்டியிருக்கிறது, இந்து சமய அறநிலையத்துறை கணக்கின்படி இந்த வருடம் முடிவதற்குள் மேலும் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்படலாம் என தெரிவித்திருக்கிறார்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்கு சொந்தமான 150 கிரவுண்டுகள் அளவுக்கு அதிகமான நிலம் இருக்கிறது. இதில் 49 கிரவுண்டுகள் மீட்கப்பட்டு இருக்கிறது, இன்னும் இரண்டு இடங்கள் ஆக்கிரமிப்பில் இருக்கிறது. சட்டப்படி ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் 60 கிரவுண்டுகள் மீட்கப்படும், 9 ஏக்கர் அளவிலான மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பீடு 300 கோடியை ஒட்டியிருக்கும் இறைவன் சொத்து இறைவனுக்கு என்ற தாரக மந்திரத்துடன் இதைப்போன்ற ஆக்கிரமிப்புகள் இருக்கின்ற நிலங்களை நாள்தோறும் மீட்டு வருகிறோம் என தெரிவித்திருக்கிறார் சேகர் பாபு.