பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவில் குட முழுக்கு விரைவில் நடத்தப்படும் – அமைச்சர் சேகர்பாபுஅறிவிப்பு

Photo of author

By Savitha

பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவில் குட முழுக்கு விரைவில் நடத்தப்படும் – அமைச்சர் சேகர்பாபுஅறிவிப்பு

பொள்ளாச்சி தொகுதி ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோவில் திருப்பணிகள் 17 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் குடமுழுக்கு நடத்தப்படும் எனவும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சட்டப் பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், பொள்ளாச்சி தொகுதி ஆனைமலை அமைந்துள்ள மாசாணியம்மன் கோவிலில் திருப்பணியுடன் குடமுழுக்கு நடத்தப்படுமா என சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் 12 ஆண்டுகள் ஆகம விதிப்படி குடமுழுக்கு செய்யப்படாத அனைத்து கோவில்களுக்கும் குடமுழுக்கு செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டதாகவும், அதன்படி 668 கோவில்களுக்கு இந்தாண்டு திருப்பணி மேற்கொள்ள முதலமைச்சர் அனுமதி அளித்துள்ளதாகவும், ஆனைமலை மாசாணியம்மன் கோவில் திருப்பணி 17 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் குடமுழுக்கு நடத்தப்படும் என்றும் கூறினார்.

மேலும், முதற்படை வீடான திருமுருகன் கோயிலில் அமைந்துள்ள குன்றில் உள்ள காசி விஸ்வநாத கோயிலுக்கு பக்தர்கள் மிக உணர்வோடு படிக்கல் ஏறி ஆண்டவனை வணங்கி கொண்டிருக்கிறார்கள் என்றும், அந்த குன்றின் மேல் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு ரோப் கார் வசதி ஏற்படுத்தி தர முடியுமா ? என திருப்பரங்குன்றம் உறுப்பினர் ராஜன் செல்லப்பா கேள்வி எழுப்பினார்.

காசி விஸ்வநாதர் கோயிலுக்கு ரோப் காப் அமைக்கும் பணிகள் குறித்து சாத்தியக்கூறு ஆராயப்பட்டு வருவதாகவும், சாத்தியக்கூறுகள் இருக்கும் பட்சத்தில் நிச்சயம் ரோப்கார் வசதி ஏற்படுத்தி தரப்படும் எனவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.