மணல் அள்ளுங்க! தடுக்குற அதிகாரி இருக்க மாட்டான்! – முன்னாள் அமைச்சர் பகிரங்க மிரட்டல்…

0
149
senthil balaji
senthil balaji

மணல் அள்ளுங்க! தடுக்குற அதிகாரி இருக்க மாட்டான்! – முன்னாள் அமைச்சர் பகிரங்க மிரட்டல்…

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை சூடு பிடித்துள்ளது. அடுத்த மாதம் 6 ஆம் தேதி தேர்தல் என்றாலும், 4ஆம் தேதி வரை மட்டுமே பரப்புரை செய்ய முடியும். அதன் பிறகு வாக்கு சேகரிக்க முடியாது.

இதனால், பரப்புரைக் கூட்டங்களில் அரசியல் கட்சியினர் வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர். இன்னும் சிலர், சட்டத்திற்கு விரோதமான செயல்களை ஊக்குவிக்கும் வகையில், அதனை ஆதரித்தும் பரப்புரை செய்து வருகின்றனர்.

அப்படி பரப்புரை கூட்டத்தில் சட்டத்திற்கு விரோதமாக ஒரு வாக்குறுதியை முன்னாள் அமைச்சர் ஒருவரே தொண்டர்களிடம் வழங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், தற்போது உள்ள சமூக ஊடகங்களின் ஆதிக்கம் இருக்கும் போது வெளிப்படையாக கூறி, அதிகரிகளுக்கும் பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருக்கிறார் அந்த முன்னாள் அமைச்சர்.

அவர் தான் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் தொகுதி திமுக வேட்பாளருமான செந்தில் பாலாஜி. கரூரில் வாக்கு சேகரித்த போது, ’முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 11 மணிக்கு கையெழுத்து போடுவார், அதன் பிறகு 11.05க்கு மாட்டு வண்டியை ஆற்றுக்கு ஓட்டிச் சென்று மணல் அள்ளுங்கள். எந்த அதிகாரியும் தடுக்க மாட்டான். தடுத்தால் எனக்கு போன் போடுங்க, அந்த அதிகாரி இருக்க மாட்டான்’ என்று உறுதியளித்தார்.

முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜி, இப்படி பகிரங்கமாக, அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வாக்குறுதி அளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மணல் கொள்ளையில் ஈடுபட தொண்டர்களை தூண்டுயிருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

அவர் பேசிய காணொலி பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதுடன், சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. வாக்குக்காக எதை வேண்டுமானாலும் சொல்லலாமா? இதை நீதிமன்றமோ, காவல்துறையோ, தேர்தல் ஆணையமோ, யாரும் கேட்க மாட்டார்களா? என்ற கேள்வி வெகுசன மக்களின் மனதில் எழுந்துள்ளது.

Previous articleஅன்புமணி ராமதாஸ் ஆரம்பித்ததை அப்படியே காப்பியடிக்கும் அரசியல் கட்சிகள்
Next articleஇது தான் கழகங்களுக்கும் மநீமவிற்கும் உள்ள வித்தியாசம்! கமல்ஹாசன் கண்டனம்