திமுக ஐடி விங்கை அலறவிட்ட பாமகவினர்! அதிர்ச்சியில் திமுக தலைமை

Photo of author

By Ammasi Manickam

திமுக ஐடி விங்கை அலறவிட்ட பாமகவினர்! அதிர்ச்சியில் திமுக தலைமை

தமிழக அரசியலில் தகவல் தொழில்நுட்பங்களை முறையாக பயன்படுத்தும் வகையில் ஆரம்ப காலங்களில் அதற்கென தனி அமைப்பை உருவாக்கி செயல்பட வைத்தது பாமக தான். ஆனால் பின் வந்த காலங்களில் திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்த சீமான், ஊடகங்களை கைக்குள் வைத்துள்ள திமுக மற்றும் மத்தியில் அதிகாரத்தில் இருக்கும் பாஜக என பெரும்பாலான கட்சிகள் தங்களுக்கென்று தகவல் தொழில்நுட்ப பிரிவை நிர்வகிக்க ஆரம்பித்தன.

தற்போது இதில் முன்னணியில் இருப்பது திமுக தான் என்றாலும் இவ்வளவு வல்லுனர்களை வைத்துள்ள திமுக ஐடி விங்கையே பாமகவினர் அலறவிட்டுள்ளனர். இது திமுக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. குறிப்பாக முரசொலி அலுவலக நில விவகாரத்தில் பாமக தரப்பு திமுகவிற்கு கடும் தலைவலியை கொடுத்துள்ளதை தமிழக மக்கள் அனைவரும் அறிவர்.

அதாவது எதிர்க்கட்சியான திமுகவையும் அதன் தலைவர் ஸ்டாலினையும் ஆளுங்கட்சியும் அதனுடன் கூட்டணியில் இருக்கும் பாஜக,பாமக உள்ளிட்ட கட்சிகளும் தொடர்ச்சியான புகார்களால் தாக்குவதும், கடும் விமர்சனங்களால் தினமும் காயப்படுத்துவதும் தொடர் கதையாக நிகழ்ந்து வருகின்றன. அந்த வகையில் தான் தற்போது முரசொலி பஞ்சமி, மிசா கைது உள்ளிட்ட பல சர்ச்சைகள் திமுகவிற்கு எதிராக எழுந்துள்ளது.

கடந்த காலங்களில் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி எந்த ஊடகத்தின் மூலம் எதிர்க்கட்சிகளுக்குக் குடைச்சல் கொடுத்தாரோ அந்த ஊடகமான முரசொலி மூலமாகவே எதிர்க்கட்சிகள் இப்போது திமுகவுக்கு குடைச்சல் கொடுத்து வருகின்றன. வழக்கமாக எதிர்க்கட்சி தான் தன்னுடைய விமர்சனங்களால் ஆளுங்கட்சியை தூங்க விடாமல் செய்ய வேண்டும், அதற்கு ஆளுங்கட்சி எதிர்க்கட்சிக்கு பதிலளிக்க வேண்டும். ஆனால் அதற்கு நேர்மாறாக தற்போது ஆளுங்கட்சிக்கும் அதன் தோழமைக் கட்சிகளுக்கும் எதிர்க்கட்சியான திமுக பதிலளிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

முரசொலி, மிசா உள்ளிட்ட விவகாரங்களில் திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள், மூத்த முன்னோடிகள் என பலர் சமாளிக்க நினைத்தாலும் எதிரில் உள்ள பாமக தரப்பு தொடர் விமர்சனங்களை எழுப்பி வருகிறது. இதனால் திமுக தலைவரான ஸ்டாலினே மேடைக்கு மேடை இதைப் பற்றி பேச வேண்டிய நிலைமைக்கு ஆளாக்கிவிட்டது பாமக. சமூக ஊடகமான ட்விட்டரில் உருவான இந்த திமுக மீதான தாக்குதல் இன்று விரிவாகி அனைத்து ஊடகங்களிலும் பரவி விட்டது.

இந்த நிலையில் திமுக ஐடி விங் நிர்வாகிகள் இந்தப் பிரச்சினைகளை சரியாக கையாளவில்லை என்றும், இது போன்ற விமர்சனங்கள் எழும் போதே அவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் குறிப்பாக பஞ்சமி நில விவகாரத்தில் ஸ்டாலினை சிக்க வைத்ததே இந்த ஐடி விங் தான் என்ற குற்றசாட்டும் எழுந்துள்ளது.

தமிழகத்தில் இருக்கும் கட்சிகளிலேயே ஐடிவிங் என்ற அமைப்பிற்கு அதிகமாக செலவு செய்வது திமுக தான். ஆனால் இவ்வளவு இருந்தும் திமுக ஐடி விங் அண்ணா பதவியேற்ற நாள், கலைஞர் தலைமையேற்ற நாள் என்று வரலாற்று கதைகளை பேசுகிறதே தவிர, தற்கால அரசியலில் அதிமுக அரசை நிலைகுலையச் செய்யும் அளவுக்கு முக்கியப் பிரச்சினைகளை கையிலெடுத்து எரிய வைக்கத் தவறிவிட்டது என்று அந்த அமைப்பின் மீது திமுக தலைவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஐடி விங்கில் இருக்கும் இசை, நெல்லை ஜோக்கின், நாங்குநேரி எட்வின், மேலும் புதுக்கோட்டை அப்துல்லா உள்ளிட்ட சில விரல் விட்டு எண்ணக் கூடிய நபர்கள் கொஞ்சம் விதிவிலக்காக தனித்துவமாக செயல்படுகிறார்கள் என்றாலும், ஒட்டு மொத்த திமுகவின் ஐடி விங் செயல்பாடு என்பது திமுக தலைவர் ஸ்டாலினை திருப்திப்படுத்தவில்லை என்றே கூறப்படுகிறது.

எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக ஆளுங்கட்சியை எதிர்த்து விமர்சனங்களால் தாக்குதல் நடத்தாமல், ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் விமர்சனங்களுக்கு கூட பதிலளிக்க முடியாமல் பதுங்கும் நிலையை திமுகவிற்கு உருவாக்கி விட்டார்கள் என்று ஐடி விங் தலைவர் பிடிஆர். தியாகராஜன் மீது பல நிர்வாகிகள் தலைமைக்கு புகார் கூறியுள்ளனர். மேலும் தகுந்த ஆர்வமுள்ள இளைஞர்களைக் கொண்டு கட்சியின் ஐடிவிங்கை பலப்படுத்துமாறும் திமுக தலைமைக்கு கோரிக்கைகள் சென்றுள்ளன என்றும் கூறப்படுகிறது.

இதற்கெல்லாம் பின்னணியில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பதிவிட்ட அந்த ஒரே ஒரு ட்விட்டர் பதிவு தான் காரணம் என்று திமுக தரப்பு புலம்பி வருவதாக கூறப்படுகிறது. இவ்வளவு நிர்வாகிகளை வைத்துள்ள திமுக ஐடி விங்கையே பாமகவினர் அலறவிட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.