தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம்! முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

Photo of author

By Sakthi

ஒட்டு மொத்த உலகத்திற்கும் உயிர் சுவாசமாக விளங்கிக் கொண்டிருக்கும் உழவுத் தொழிலை போற்றும் விதமாக தமிழர்களின் பண்பாட்டு விழாவாகவும், உழைப்பின் சிறப்பையும், உழவுத் தொழிலுக்கு உயிரூட்டும் சூரியனையும், உறுதுணையாக இருக்கும் கால்நடைகளையும், போற்றிப் பணிகின்ற நன்னாளாக சாதி, மத, பேதம், இன்றி நாம் எல்லோரும் ஓர் இனம் தமிழினம் என்ற உன்னத உணர்வை பிரதிபலிக்கும் விதத்திலும், பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.

இவ்வளவு சிறப்புமிக்க தமிழர் திருநாள் என்று போற்றப்படும் தைப்பொங்கல் திருநாளை தமிழக மக்கள் அதை சிறப்பாக கொண்டாடும் விதத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மற்றும் முகாம் வாழ் இலங்கை தமிழ் குடும்பங்களுக்கும், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம் பருப்பு, உப்பு ரவை, கோதுமை மாவு, வெல்லம், அரிசி, முந்திரிப்பருப்பு, திராட்சை, ஏலக்காய், உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் அடங்கிய துணிப்பையுடன் கூடிய பரிசுத் தொகுப்பு மற்றும் முழு கரும்பு இவை அனைத்தும் சேர்த்து 2.15 கோடி குடும்பங்களுக்கு ரூபாய்1.296.88 கோடி செலவில் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில், கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பாக சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை தமிழகத்தில் வழங்கிடும் பணியை தொடங்கி வைப்பதன் அடையாளமாக சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் 10 குடும்பங்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியிருக்கிறார்.

இந்த சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றிட குடும்ப அட்டைதாரர்கள் அதிக எண்ணிக்கையில் நியாயவிலை கடைகளுக்கு ஒரேசமயத்தில் வருவதை தடுக்கும் விதமாகவும், நோய்தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற ஏதுவாகவும், பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்ய அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு டோக்கன் வழங்கப்படுகிறது.

அதில் குறிப்பிடப்பட்டு இருக்கின்ற நாள் மற்றும் நேரத்தில் அந்த குடும்ப அட்டைதாரர்கள் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு அரசின் நோய் தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பெரியசாமி, சக்கரபாணி, சுப்பிரமணியன், சேகர்பாபு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றார்கள் தமிழக அரசின் சார்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.