கடந்த சில வருடங்களாகவே தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியை பாஜக அரசு கொடுக்க மறுக்கிறது. இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களுக்கும் தேவைப்படும் நிதியை கொடுப்பது மத்திய அரசின் பணி. ஆனால், பாஜக அரசு அதை சரியாக செய்வது இல்லை. பாஜக ஆட்சி நடக்கும் மாநிலங்களுக்குள் நிதியை அள்ளிக்கொடுக்கும் ஒன்றிய அரசு பாஜக அல்லாத மாநிலங்களுக்கு கிள்ளி கூட கொடுப்பது இல்லை. கடந்த 4 வருடங்களாகவே தமிழகத்திற்கு தேவையான நிதியை ஒன்றிய அரசு கொடுப்பதே இல்லை. இத்தனைக்கும் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் அதிக ஜி.எஸ்.டி வரி கொடுப்பது தமிழ்நாடுதான்.
ஆனாலும், தமிழ்நாட்டை பாஜக அரசு பாராமுகமாகவே பார்க்கிறது. அதற்கு காரணம் தமிழகத்தில் மக்கள் பாஜகவுக்கு வாக்களிப்பது இல்லை. அதோடு, பாஜக கொண்டு வரும் எல்லா திட்டங்களையும் திமுக அரசு கடுமையாக எதிர்க்கிறது. மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழகத்திற்கான நிதியை கொடுப்போம் என மத்திய அமைச்சர் சொன்னார்.
சில நாட்களுக்கு முன்பு புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைக்க ராமேஸ்வரம் சென்ற பிரதமர் மோடி ‘தமிழ்நாட்டுக்கு பல மடங்கு நிதி அதிகமாக வழங்கிவிட்டோம். ஆனால் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் அழுதுகொண்டே இருக்கட்டும்’ என திமுகவை மறைமுகமாக சொன்னார்.
இந்நிலையில், இன்று ஒருவிழாவில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின் ‘நாங்கள் நிதி கேட்பது அழுகை இல்லை. தமிழ்நாட்டு மக்களின் உரிமை. நான் அழுது புலம்புவனும் அல்ல. யார் காலில் ஊர்ந்து போய் விழுபவனும் அல்ல. ‘ஒன்றிய அரசிடம் கையேந்தி நிற்க மாநிலங்கள் என்ன பிச்சைக்காரர்களா?’ என குஜராத் முதல்வராக நீங்கள் பேசியதை உங்களுக்கே நினைவு படுத்துகிறேன்’ என பேசியிருக்கிறார்.