விரைவில் 11 இலக்க எண்களாக மாறவிருக்கும் அலைபேசி எண்கள்!

Photo of author

By Parthipan K

1990களின் இறுதியில் இந்தியாவில் மொபைல் ஃபோன் எனப்படும் அலைபேசி பயன்பாடு அதிகரிக்க துவங்கியது. அலைபேசிகள் அறிமுகம் செய்யப்பட்ட ஆரம்ப காலத்தில் ஸ்கைசெல், ஆர்பிஜி உள்ளிட்ட விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலான ஆப்பரட்டர்களே இருந்தனர். அப்போது 98400, 98410, 98401, 98411 என ஆரம்பிக்கும் எண்களே அலைபேசி எண்களாக இருக்கும். இன்கமிங், பகுதியை என இரண்டுக்கும் கட்டணம் வசூலிக்கபட்ட அந்த சமயத்தில் பணக்காரர்கள் மட்டுமே அலைபேசி பயன்படுத்தக் கூடும் என்ற நிலை இருந்து வந்தது.

நாளடைவில் இன்கமிங் அழைப்புகளுக்கு கட்டணமில்லை என நிலை மாற மெல்ல நடுத்தர வர்க்கத்தினரும் அலைபேசி பயன்படுத்த துவங்கினர். இதனையடுத்து ஆப்பரேட்டர்களும் அதிகரித்தனர். இதனால் சந்தாதாரர்களுக்கு அளிக்கப்படும் முதல் 5 இலக்க எண்களை ஆப்பரேட்டர்கள் அடிப்படையில் ட்ராய் ஒதுக்கியது.

2000தின் மத்தியில் ரிலயன்ஸ் 501 ரூபாய்க்கு மொலை ஃபோன் அறிமுகம் செய்தது பெரும் புரட்சியாக அமைந்தது. அதனால் மளமளவென அலைபேசி பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து இன்று அலைபேசி வைத்திருக்காதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் என்ற நிலை ஏறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் எனப்படும் டிராய், இந்தியாவில் உள்ள மொபைல் போன்களுக்கான 10 இலக்கு எண்ணை 11 இலக்கு எண்ணாக மாற்றுவதற்கு பரிந்துரை செய்துள்ளது.

தகவல் தொடர்பு மற்றும் இணைய பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 2050 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்ய சுமார் 2.6 பில்லியின் புது எண்கள் தேவைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைப்பேசி இணைப்புகளின் தேவை எண்ணிக்கை அதிகரிப்பதே இந்த நடவடிக்கைக்கான முக்கிய காரணம் என்று டிராய் இந்தப் பரிந்துரையை வழங்கியுள்ளது.

இது குறித்து டிராய் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போது வழங்கப்படும் 10 இலக்க எண்களுக்கு பதில், 11 இலக்க எண்களாக வழங்கலாம். தற்போது லேண்ட் லைன் மூலம் அலைப்பேசி தொடர்பு கொள்ளும் போது 10 இலக்க எண்களுக்கு முன் பூஜ்யத்தைப் பயன்படுத்தலாம். இப்படி 11 இலக்க எண்களாக மாற்றும் போது புதிய தொடர்பு எண்கள் வழங்குவது எளிதாக இருக்கும்.”

இந்த கொள்கைப்படி, 11 இலக்க எண்கள் ஒதுக்கப்பட்டால், 1000 கோடி தொடர்பு எண்கள் புதிதாக வழங்க முடியும். அதில் இந்தியாவின் தேவை 70 சதவீதம் பூர்த்தியாகும்.

மேலும், தரவு பயணப்பாட்டிற்கு (டாங்கிள் இணைப்புகளுக்கு) மட்டும் பயன்படுத்தும் எண்களை 10 இலக்கங்களிலிருந்து 13 இலக்க எண்களாக வழங்கவும் பரிந்துரைத்து உள்ளதாக டிராய் கூறியுள்ளது.