இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை நடப்பாண்டில் ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் 50 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதுகுறித்து ஐடிசி நிறுவனத்தின் ஆய்வு அறிக்கையில் கூறியதாவது:
கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட பொது முடக்க அறிவிப்புகளால் நடப்பாண்டில்ஏப்ரல் ஜூன் வரையிலான மூன்று மாத காலத்தில் உள்நாட்டு சந்தைகளில் ஸ்மார்ட்போன் விற்பனை பாதியாக குறைந்துள்ளது.
இருப்பினும் 2020 ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலகட்டத்திலிருந்து ஸ்மார்ட்போன் விற்பனை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒட்டுமொத்த சந்தையில் சாம்சங் நிறுவனம் 24 சதவீத சந்தை பங்களிப்பை கொடுத்து முன்னிலை வகிக்கிறது. ரெட்மி, விவோ ஆகியவை அடுத்தடுத்து இடத்தில் உள்ள நிறுவனங்கள் ஆகும்.
பொது முடக்க காலத்தில், பெரும்பாலான விற்பனையாளர்கள் மொபைல் போன்களை விற்பனை செய்ய புது வழி முறைகளை கண்டறிந்துள்ளனர். அதன்படி வாட்ஸ்அப் மூலமாகவும், நேரடியாக வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று போன்களை விற்பனையில் ஈடுபடுகின்றனர்.
அதே போன்ற டிஜிட்டல் பணி பரிவர்த்தனைகள் மூலமாகவே அவர்கள் ஸ்மார்ட்போன் விற்பனைக்கான தொகையை பெற்றுக் கொண்டனர். இவ்வாறு பல வழிகளில் விற்பனைகளை சூடுபிடிக்க முயற்சிக்கின்றனர்.
ஏப்ரலில் ஜிஎஸ்டி அதிகரிப்பு, ரூபாய் மதிப்பில் ஏற்பட்ட சரிவு காரணமாக ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது தயாரிப்பின் விலையை அதிகரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன.