ஆப்கானிஸ்தானின் அரசியல் நிலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி முக்கிய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார். சென்ற ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் தலிபான் பயங்கரவாதிகள் ஒட்டுமொத்தமாக கைப்பற்றியதை அடுத்து அந்த நாட்டு அதிபர் விமானத்தில் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதியன்று அமெரிக்காவின் கடைசி விமானமும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி விட்டது. ஆகவே தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் புதிய அரசை அமைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். ஆனால் வடகிழக்கு மாகாணமாக இருந்து வரும் பஞ்ச்ஷீல் பகுதியில் தாலிபான்களுக்கு மிகப்பெரிய நெருக்கடி உண்டானது. அங்கே இருக்கின்ற தாலிபான் எதிர்ப்புப் படையினர் சுமார் 600 தாலிபான்களை கொன்றுவிட்டதாக செய்திகள் வெளியாகத் தொடங்கின. இந்த சூழ்நிலையில், அந்த மாகாணத்தையும் நேற்று தாலிபான்கள் முழுமையாக கைப்பற்றி விட்டனர்.
இதற்கு நடுவில் ஆட்சி அமைப்பது குறித்து தாலிபான்களுக்கும், ஹக்கானி நெட்வோர்க் அமைப்பிற்கும் இடையில் மோதல் உண்டானது இந்த மோதலை தீர்த்து வைப்பதற்காக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பாகிஸ்தானின் உளவு பிரிவான ஐஎஸ்ஐ தலைவர் பயணம் மேற்கொண்டார்.இந்த சூழ்நிலையில்தான் பிரதமர் நரேந்திர மோடி ஆப்கானிஸ்தானின் அரசியல் நிலை தொடர்பாக முக்கிய ஆலோசனை ஒன்றை டெல்லியில் நடத்தி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்ற சொல்லப்படுகிறது.
சென்ற வாரம் கத்தாருக்கான இந்திய தூதர் தீபக் மிட்டல் யோகாவில் தாலிபான்கள் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். அந்த சமயத்தில் இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆப்கானிஸ்தான் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று இந்திய அரசு தெரிவித்திருக்கிறது. அதேபோல ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் முதலீட்டுத் திட்டங்கள் தொடர வேண்டும் என்று தாலிபான்கள் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகத் தொடங்கின.
இருந்தாலும் தாலிபான்கள் சொல்வது வேறு, செய்வது வேறு, என்பதுதான் இதுவரையிலான தாலிபான்களின் நிலைமையாக இருந்து வருகிறது. இந்தியாவிற்கு எதிராக சதி செயல்களை செய்து வரும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பின் தலைவர் அங்கே சென்று தாலிபான்கள் அரசு அமைப்பது தொடர்பாக ஆலோசனைகள் ஈடுபட்டதும், தாலிபான்களுக்கும் சீனாவுக்கும் உறவு உறுதிப்படுத்தப்பட்டு வெளிப்படையாகவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இப்படியான சூழ்நிலையில்தான் வரலாறு ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், நம்முடைய நாட்டிற்கு மிக முக்கியமான இடத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தான் நிலைமை தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி மிகத் தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் சூழ்நிலை மாறி வருவதை மனதில் நிறுத்தி இந்தியாவின் உடனடி முன்னுரிமைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி ஒரு உயர்மட்ட குழுவை அமைத்து இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த குழுவில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் மற்றும் மூத்த அதிகாரிகள் இடம் பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.