பாஜக தோல்வியை முன்பே காட்டி கொடுத்த மோடியின் ரோடு ஷோ.. அதிருப்தியில் நிர்வாகிகள்!!
நேற்று சென்னையில் பிரதமர் மோடி நடத்திய ரோடு ஷோவில் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் வராததால், அந்நிகழ்வை முன்கூட்டியே முடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாட்டை நோக்கி தேசிய தலைவர்களின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.குறிப்பாக பாஜக தலைவர்கள் முகாமிடுவது ஏராளம். அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், எல்.முருகன் உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்களை வெற்றி பெற வைப்பதற்காகவே, பாஜக தலைமை தீவிரம் காட்டுவதாக சொல்லப்படுகிறது.
அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி, நேற்று சென்னையில் ரோடு ஷோ நடத்தினார்.இதில் அவருடன் பாஜக வேட்பாளர்களாகிய தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலை, பால் கனகராஜ் உள்ளிட்டோர் இருந்தனர்.வழிநெடுகிலும், தொண்டர்கள், மக்கள் என பிரதமர் மோடியை வரவேற்று கையசைத்தனர். கையில் தாமரை சின்னத்துடன் பிரதமர் மோடியும் மக்களை பார்த்து கையசைத்தார். “தமிழ்நாடு பாஜகவை வரவேற்கிறது”, “நாங்கள் மோடியின் குடும்பம்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பிரதமர் வருகையை கொண்டாடினர்.
இதுபற்றி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, “சென்னை என் மனதை வென்றது! இந்த ஆற்றல் மிக்க நகரத்தில் இன்றைய ரோட்ஷோ என் நினைவில் என்றும் நிலைத்திருக்கும்.மக்கள் சேவையில் தொடர்ந்து கடினமாக உழைக்கவும், நமது தேசத்தை மேலும் வளர்ச்சியடையச் செய்யவும் மக்களின் ஆசிகள் எனக்கு வலுவைத் தருகின்றன.சென்னையில் காணப்படும் இந்த உற்சாகம், தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரிய அளவில் ஆதரவளிக்கத் தயாராக உள்ளது என்பதைக் காட்டுவதாக உள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.
இப்படி பிரமாண்டமாக நடந்ததாக கூறப்படும் இந்த ரோடு ஷோவில் கூட்டம் பெரிதளவில் இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.பாஜக காசு கொடுத்து அழைத்து வந்த கூட்டம் தான் இது என்றும், மக்கள் கூட்டம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.
மேலும், கூட்டம் பெரிய அளவில் இல்லாததால், முன்கூட்டியே நிகழ்ச்சியை முடித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.சென்னையில் பாஜக வேட்பாளர் ஒருவராவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடனே பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சி நடந்ததாக தெரிகிறது.ஆனால் சென்னை ரோடு ஷோவுக்கே பெரிய ஆர்பரிப்பு இல்லாதது, தேர்தலில் பாஜகவின் தோல்வியை குறிப்பதாக திமுகவினர் விமர்சிக்கின்றனர்.
தென்சென்னை தொகுதியில், திமுகவின் தமிழச்சி தங்கபாண்டியன், அதிமுகவின் ஜெயவர்தன் ஆகியோருக்கு இணையாக பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் களத்தில் இருக்கிறார்.அதேபோல வடசென்னையில் சரிக்கு சமமாக பாஜகவின் வேட்பாளர் பால் கனகராஜ் டஃப் கொடுக்கிறார்.இவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் ரோடு ஷோ எந்த அளவுக்கு கை கொடுத்தது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.