பழனியில் பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் பஞ்சாமிர்தத்தில் ஆண்மை தன்மையை குறைக்கும் கருத்தடை மாத்திரைகள் கலந்திருப்பதாக தமிழ் சினிமா இயக்குநர் மோகன் ஜி அவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ள நிலையில் அவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கடந்த ஒரு வாரமாக திருப்பதி லட்டு குறித்த விவகாரம் தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. அதாவது திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்புகள் கலந்துள்ளதாக வெளியான தகவல்கள் பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் மோகன் ஜி அவர்கள் பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இயக்குநர் மோகன் ஜி அவர்கள் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்று அளித்த பேட்டியில் “திருப்பதியில் எவ்வாறு லட்டு பிரசாதமாக வழங்கப்படுகின்றதோ அதே போல தமிழகத்தில் பழனி திருக்கோயிலில் பிரசாதமாக பஞ்சாமிர்தம் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த பஞ்சாமிர்தத்தில் ஆண்மை தன்மையை குறைக்கும் கருத்தடை மாத்திரைகள் கலந்திருப்பதாக செய்திகள் கேள்விப்பட்டேன்.
ஆனால் இந்த செய்திகள் வெளியே தெரியாமல் மறைக்க வேறு ஒரு வழக்கை தொடர்ந்து அதை மூடி மறைத்து விட்டார்கள். ஆனால் என்னிடம் பழனியில் வேலை செய்பவர்களே பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் கலப்பதாக கூறியுள்ளனர். அங்கு வேலை செய்யும் இந்துக்களை யாரோ அடிப்பதாகவும் அவர்கள் என்னிடம் கூறினர். இது போன்ற சம்பவங்கள் பல இடங்களில் நடக்கின்றது” என்று கூறினார்.
இந்த பேட்டியை அடுத்து சென்னை காவல்துறையினர் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் கலந்திருப்பதாக பேட்டியளித்த இயக்குநர். மோகன் ஜி அவர்களை அதிரடியாக கைது செய்துள்ளனர். இயக்குநர் மோகன் ஜி அவர்களை சென்னை காவல்துறையினர் காசிமேடு இல்லத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.