ருத்ர தாண்டவம் திரைப்படத்தின் கதை என்ன? ட்ரைலருக்கு முன்பே ரகசியமாக கசியவிட்ட படக்குழு
கடந்த ஆண்டு வெளியான திரௌபதி திரைப்படம் தமிழக அளவில் பலராலும் பேசப்பட்டது.பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் இயக்குனரான மோகன் ஜி இந்த படத்தை இயக்கியிருந்தார்.இந்த படத்தில் நடிகர் அஜித்தின் மைத்துனரும்,அவரது மனைவி நடிகை ஷாலினியின் சகோதரருமான ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்திருந்தார்.இவருக்கு ஜோடியாக டூ லெட் படத்தின் மூலம் பிரபலமான ஷீலா ராஜ்குமார் நடித்திருந்தார்.மேலும் இவர்களுடன் கருணாஸ்,மறுமலர்ச்சி படத்தின் இயக்குனர் பாரதி மற்றும் நிஷாந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக தியேட்டர்களில் குறைவான நாட்களே ஓடியிருந்த நிலையில் அதிக வசூலை பெற்று தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்தது.குறிப்பாக அப்போது வெளியான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் தர்பார் படத்தையும் மீறி இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இயக்குனர் மோகன் ஜி அடுத்ததாக ருத்ர தாண்டவம் என்ற படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்திருந்தார்.இந்த படத்திலும் திரௌபதி கதாநாயகன் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடிக்கிறார்.தொலைக்காட்சி பிரபலம் தர்ஷா குப்தா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.மேலும் பிரபல இயக்குனர் கௌதம்மேனன்,நடிகர் ராதாரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் ருத்ர தாண்டவம் படபிடிப்பு முடிந்து சென்சார் அனுமதியும் பெற்று விட்டதாக சமீபத்தில் மோகன் தெரிவித்திருந்தார்.இதனையடுத்து படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.திரௌபதி திரைப்படத்தின் ட்ரைலர் வெளியான போது தமிழக அரசியலில் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி நாடக காதல் என்பதை பேசு பொருளாக மாற்றியது.
அந்த வகையில் ருத்ர தாண்டவம் ட்ரைலர் எந்த கதையை அடிப்படையாக கொண்டது என்பதை அறிய அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.குறிப்பாக படக்குழுவும் கதை குறித்து எதுவும் தெரிவிக்காமல் சஸ்பென்ஸ் தருகின்றனர்.ஆனாலும் அவரது ரசிகர்கள் விடாமல் ருத்ர தாண்டவம் திரைப்படத்தின் கதை குறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.அந்த வகையில் ருத்ர தாண்டவம் திரைப்படம் PCR என்ற வன்கொடுமை தடுப்பு சட்டம் எப்படியெல்லாம் தவறாக பயன்படுத்தபடுகிறது என்பதை பேசவுள்ளதாகவும் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கு ஆதாரமாக படக்குழுவினர் வெளியிட்ட புகைப்படத்தில் உள்ள செய்தித்தாளின் தலைப்பு செய்தியை இணைத்து கூறி வருகின்றனர்.ஏற்கனவே தமிழகத்தில் நிறைய நபர்கள் போலி PCR வழக்குகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.PCR சட்டம் பல்வேறு இடங்களில் தவறாக பயன்படுத்தபடுவதாக பாமக போன்ற அரசியல் கட்சிகளும் குற்றம் சாட்டியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.அந்த வகையில் ருத்ர தாண்டவம் திரைப்படம் உண்மையாகவே இந்த போலி PCR வழக்குகளை பற்றி தான் பேச போகிறதா என்பதை இன்று வெளியாகும் ட்ரைலர் உறுதி செய்துவிடும் என்று எதிர்பார்க்கபடுகிறது.