Mohanlal: மலையாளத்தில் முக்கிய நடிகராக இருப்பவர் மோகன்லால். 50 வருடங்களாக மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். கோலிவுட்டில் ரஜினி – கமல் போல மல்லுவுட்டில் மம்முட்டி – மோகன்லால் இருக்கிறார்கள். இப்போதும் இவர்களின் படங்களுக்கு கேரளாவில் நல்ல மவுசு இருக்கிறது. இப்போதும் இருவரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தமிழிலும் மோகன்லால் அவ்வப்போது நடிப்பதுண்டு. இருவர், ஜில்லா, காப்பான் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து சூப்பர் ஹிட் அடித்த ஜெயிலர் படத்திலும் கேமியோ வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார். இப்போது பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து உருவாகியுள்ள திரைப்படமான எம்புரான் வருகிற 27ம் தேதி வெளியாகவுள்ளது. எனவே பிரித்திவிராஜும், மோகன்லாலும் தமிழக ஊடகத்தை சந்தித்து பேசி வருகிறார்கள்.
பல யுடியூப் சேனல்களுக்கும் அவர்கள் பேட்டி கொடுத்து வருகிறார்கள். அப்போது எம்புரான் படம் பற்றிய பல தகவல்களையும் பிரித்திவிராஜ் பகிர்ந்துகொண்டார். எம்புரான் படத்திற்கு மோகன்லால் சம்பளமே வாங்காமல் நடித்து கொடுத்திருக்கிறார்.; எனவே, மொத்த பட்ஜெட்டையும் படத்தை எடுப்பதற்கு மட்டுமே பயன்படுத்தி இருக்கிறார்கள். படம் வெளியாக வசூலை பெற்றபின் மோகன்லாலுக்கு சம்பளம் வழங்கப்படும் என தெரிகிறது.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேட்டி கொடுத்த மோகன்லாலிடம் ‘ஜெயிலர் படத்தில் கேமியோ வேட்த்தில் உங்களை பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது. அந்த படத்திற்கு பின் உங்களுக்கு தமிழ் படங்களில் வாய்ப்பு வந்ததா?’ என கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொன்ன மோகன்லால் ‘நிறைய கதைகள் வந்தது. ஆனால், எம்புரான் படத்தில் நான் பிஸியாக இருந்தேன். ஜெயிலர் 2 இப்போது துவங்கியிருக்கிறது. அந்த படத்தில் என்னை அழைத்தால் கண்டிப்பாக நடிப்பேன்’ என சொல்லியிருக்கிறார்.