அம்மா இலவச தையல் பயிற்சி! எடப்பாடி பழனிசாமி சான்றிதழ் வழங்கி வாழ்த்து!
அதிமுகவில் ஏற்பட்டு வரும் பல்வேறு சலசலப்புகளின் மத்தியில் சொந்த ஊரான சேலத்திற்கு எடப்பாடி பழனிசாமி சென்றுள்ளார். இந்நிலையில் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் தங்கி ஓய்வு எடுத்து வரும் நிலையில் கட்சியினரை சந்தித்து வருகின்றார்.
மேலும் விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு ரத்தத்தின் ரத்தங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் என கூறப்படுகிறது. மேலும் சேலம் அதிமுக மாநகர் மாவட்ட கழகம் சார்பில் தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்களை வழங்கி எடப்பாடி பழனிசாமி சிறப்பித்துள்ளார்.
இதற்கு முன்னதாக ஏழை மகளிர் தொழில் பயிற்சி பெற்று சுய தொழில் தொடங்கி வாழ்வியல் பொருளாதார மேம்பாடு அடைய வேண்டும் என்ற நோக்கில் புரட்சித்தலைவி அம்மா இலவச தையில் பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டது. சேலம் மாநகர் மாவட்ட கழகம் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.
மேலும் கடந்த மே மாதம் 13ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டு சிறப்பான முறையில் பெண்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி நிலையம் பெய்யனூர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு பயிற்சியில் சேரும் பெண்களுக்கு நான்கு மாத கால பயிற்சியை வழங்கப்படுகிறது. முதல் நான்கு மாத பயிற்சியை முடித்த 30 பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
அடுத்து பயிற்சி முடித்த 30 பெண்களுக்கு இன்று சான்றிதழ் வழங்கப்பட்டது. சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில் தையல் பயிற்சி முடித்த பெண்களும் கலந்து கொண்டனர். அவர்களுக்கு திமுக இடைக்கால பொதுச் செயலாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சான்றிதழை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து மூன்றாவதாக சேர்ந்துள்ள 30 பெண்களுக்கு வாழ்த்து கூறி பயிற்சியை சிறப்பான முறையில் முடிக்க அறிவுறுத்தி உள்ளார். இந்த நிகழ்ச்சியில் சேலம் மாநகர மாவட்ட கழக செயலாளர் வெங்கடாஜலம், மாநகர அவை தலைவர் பன்னீர்செல்வம், மாநகர பொருளாளர் வெங்கடாஜலம், பகுதி கழகச் செயலாளர் ஏ.கே,எஸ்.எம் பாலு மாரியப்பன், ஜெயப்பிரகாஷ், பாண்டியன், முருகன் ஆகியோரும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.