திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான மு க ஸ்டாலின் அவர்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாதாந்திர கணக்கெடுப்பின் மூலம் மின் கட்டணத்தை குறைப்போம் என்று வாக்குறுதியை அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் ப்ரீபெய்டு மின் கட்டண மீட்டரை அறிமுகப்படுத்தி இரு மாதங்களுக்கு ஒரு முறை எடுக்கப்படும் மின்சார கணக்கீட்டை மாதாந்திர கணக்கீடாக நடைமுறைப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் மின்சார பயன்பாட்டை கணக்கிடுவதற்காக ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்தும் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது. அதில் ப்ரீபெய்ட் மீட்டர் முறையையும் சேர்த்து அறிமுகம் செய்ய வேண்டும் என மத்திய அரசு தமிழக அரசிற்கு யோசனை அளித்துள்ளது. ஆனால் தமிழக அரசோ இதனை ஏற்க மறுத்து, எங்களுக்கு போஸ்ட் பெய்டு மீட்டர் முறையை மட்டுமே நடைமுறைப்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசிடம் வலியுறுத்தி இருக்கிறது.
ப்ரீபெய்ட் மீட்டர் முறையை வேண்டாம் எனக் கூற இரண்டு காரணங்களை தமிழக அரசு முன்வைத்துள்ளது. முதலாவது ப்ரீபெய்ட் மீட்டர் முறையை அனைத்து நுகர்வோரும் கேட்க மாட்டார்கள் என்றும், இரண்டாவதாக ப்ரீபெய்ட் மீட்டர் முறை கொண்டுவரப்பட்டால், தமிழக அரசு இலவசமாக வழங்கும் 100 யூனிட் மின்சாரத்தை வழங்க முடியாது எனவும் கூறியுள்ளது.
ப்ரீபெய்ட் மீட்டர் முறையை அறிமுகம் செய்ய தமிழக அரசு பொதுமக்களிடம் விரிவான கருத்து கேட்பு எதுவும் நடத்தவில்லை என்றும், அவ்வாறு செய்யாமல் தானாகவே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறுவது சரியல்ல என்றும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் 100 யூனிட் இலவச மின்சாரத்தை ப்ரீபெய்ட் மீட்டர் மூலம் வழங்க முடியவில்லை என்றால், அதற்கான தொகையை நுகர்வோரின் வங்கி கணக்கில் செலுத்தி விடலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
எனவே ப்ரீபெய்ட் மீட்டர் முறையை தமிழக அரசு எதிர்ப்பது நியாயமல்ல, போஸ்ட்பெய்டு மீட்டர் முறை, ப்ரீபெய்ட் மீட்டர் முறை ஆகிய இரு முறைகளையும் தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.