சீனாவிலிருந்து மதுரை வந்த தாய் மகளுக்கு கொரோனா உறுதி! அச்சத்தில் மக்கள்!!
பிஎப் 7 என்ற உருமாறிய கொரோனா வைரசினால் நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சீனாவில் இருந்து மதுரை வந்த தாய் மகள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாக இருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கையில் இருந்து 70 பயணிகளுடன் நேற்று காலை 9.40 மணி அளவில் மதுரை விமான நிலையத்திற்கு தனியார் விமானம் ஒன்று வந்தது.அதில் சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை வந்த பயணியிடம் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.
அப்போது விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 39 வயதான பெண்மணி மற்றும் அவரது ஆறு வயது மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து இவர்களை சொந்த ஊருக்கு உரிய பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.தற்போது விருதுநகரில் உள்ள ஒரு கிராமத்தில் தங்கி இருக்கும் தாய் மகள் இருவரையும் 15 நாட்கள் தனிமைப்படுத்தி அவர்களுக்கு உரிய மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.இவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இந்த பெண்ணின் கணவர் சீனாவில் வேலை செய்துள்ளார்.எனவே தனது மனைவி மகளுடன் குடும்பமாக சீனாவில் தங்கி வேலை பார்த்து வந்த நிலையில் அவர் ஜெர்மனிக்கு வேலைக்காக சென்றுள்ளார்.இதனால் உடன் இருந்த மனைவி மகள் இருவரும் தமிழகம் திரும்பி உள்ளனர்.இந்நிலையில்தான் இவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து 70 பயணிகளுடன் இலங்கையில் இருந்து தனியார் விமானத்தில் வந்த பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதுடன்,இவர்களின் பெயர் பட்டியல் பெறப்பட்டு தீவிரமாக கண்காணிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் மதுரைக்கு வந்த தாய் மகள் இருவருக்கும் புதிய வகை பிஎப் 7 கொரோனா தொற்று பாதிப்பு உள்ளதா என்பது மேற்பட்ட பரிசோதனையில் தான் தெரியவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மதுரை விமானம் நிலையம் மற்றும் விருதுநகரில் பெரும் அச்சம் நிலவியுள்ளது.