கோவையில் நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனங்கள்!! அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!

Photo of author

By Parthipan K

கோவை மக்களுக்காக நடமாடும் கொரோனா வைரஸ் பரிசோதனை வாகனங்களை ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று துவக்கி வைத்தார்.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த தொற்றால் ஒவ்வொரு நாளும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 500 கடந்து வருகிறது. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி சார்பில் தினமும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வைரஸ் தொற்று நோய்கள் கண்டறியப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்காக 20 நடமாடும் பரிசோதனை வாகனங்களையும், 5 விழிப்புணர்வு வாகனங்களையும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று துவக்கி வைத்தார்.

கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவையை பொறுத்தவரை நாளொன்றுக்கு சுமார் 7,000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா பரிசோதனை அதிக அளவில் மேற்கொள்ள ஏதுவாக நடமாடும் பரிசோதனை வாகனங்கள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நடமாடும் வாகனத்தில் ஆய்வு பரிசோதனைகளை மேற்கொள்ள செவிலியர், மற்றும் மருத்துவ தொழில்நுட்ப உதவியாளர்கள் இருப்பர்.

கோவையில் இதுவரை 10,810 சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் 11,63,212 பேருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவையில் இதுவரை 3,27,516 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் தற்போது வரை 25,914 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில், 21,168 நபர்கள் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கோவையில் மட்டும் 9,376 படுக்கை வசதிகள் வைரஸ் தொற்று சிகிச்சை பெறும் நபர்களுக்காக உள்ளன. மேலும், கொடிசியாவில் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட சித்தா முறை சிகிச்சை மையத்தில் 700க்கும் மேற்பட்ட நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.