சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. அதே நேரத்தில் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக 66 இடங்களில் மட்டுமே வெற்றி அடைந்து எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கிறது.தற்சமயம் ஆட்சியில் இருக்கின்ற திமுக அரசு அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் முறைகேடு செய்து இருப்பதாக தெரிவிக்கப்படும் புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதில் தீவிரமாக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. அதோடு சமூக வலைத்தளங்களில் திமுக தொடர்பாகவும், அதன் தலைவர்கள் தொடர்பாகவும், அவதூறாக பேசி அவர்களை உடனடியாக கைது செய்யும் நடவடிக்கையில் திமுக தலைமை இறங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.
அதில் சாட்டை துரைமுருகன், கிஷோர் கே சாமி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்கள். அதோடு அதிமுகவின் முக்கிய தலைவர்கள் மீது தெரிவிக்கப்படும் ஒவ்வொரு புகார்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுப்பதில் தமிழக அரசு ஆர்வம் காட்டி வருகிறது.இந்த சூழ்நிலையில், கரூர் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் இன்று அதிகாலை முதலே சோதனையில் ஈடுபட்டார்கள்.
இந்த சூழ்நிலையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வழக்கறிஞர் சற்றுமுன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி அளித்து இருக்கிறார். தமிழக அரசின் உத்தரவின் பெயரில் இந்த சோதனை நடைபெறுகிறது. ஆவணங்கள் எல்லாம் எங்களிடம் சரியாக இருக்கிறது வழக்கமான சோதனை தான் தற்சமயம் நடைபெறுகிறது இன்று தெரிவித்திருக்கின்றார்.
முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்தால் மட்டுமே லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் சோதனை செய்ய இயலும். இது எல்லாம் வழக்கமான ஒரு நடவடிக்கை தான். இந்த சோதனையை பொருத்தவரையில் எங்களிடம் இருக்கின்ற ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார்கள். அதனை நாங்கள் செய்திருக்கின்றோம் என்று தெரிவித்தார்.
லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யாமல் சோதனையில் ஈடுபட இயலாது அந்த விதத்தில் அவர்கள் வழக்கு பதிவு செய்து தற்சமயம் சோதனை நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது அனைத்து விதமான ஆவணங்களும் எங்களிடம் சரியாக இருக்கிறது எந்தவிதமான பிரச்சனையும் கிடையாது எனக் கூறியிருக்கின்றார்.
எங்களிடம் எந்தவிதமான முறைகேடும் நடக்கவில்லை. எந்தவிதமான ஒப்பந்தத்திலும் முறைகேடாக முன்னால் அமைச்சர் விஜயபாஸ்கர் கையொப்பம் இடவில்லை. அமைச்சராக இருந்த சமயத்தில் அவர் வாங்கிய சொத்துக்கள் மற்றும் அவருடைய சொத்து கணக்கு வழக்குகளை கேட்டிருக்கிறார்கள். அதனை நாங்கள் சமர்ப்பணம் செய்து இருக்கின்றோம்.
இதில் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது நாங்கள் முழுமையான ஒத்துழைப்பை அவர்களுக்கு கொடுத்துக்கொண்டே இருக்கின்றோம். விஜயபாஸ்கர் அவர்களை நான் நேரில் சந்தித்து பேசினேன். எந்த விதமான பிரச்சனையும் இல்லை என்று அவர் தெரிவித்திருக்கிறார் என கூறியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் இன் வழக்கறிஞர்.