தொடர்ச்சியாக மூன்று தோல்விகளுக்கு பின் மும்பை அணி பெற்ற முதல் வெற்றி!

0
319

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று இரவு நடைபெற்ற நாற்பத்தி இரண்டாவது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை அணி பஞ்சாப் அணியை சந்தித்தது. பஞ்சாப் அணியில் கழுத்து பிடிப்பின் காரணமாக அவதிப்பட்டு வரும் மயங்க் அகர்வாலுக்கு பதிலாக மன்தீப் சிங் இடம்பிடித்தார். டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நோய் தொற்று காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து முதலில் பேட்டிங்கை தொடங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது அதாவது, மன்தீப் சிங் 15 ரன்னில் வெளியேறினார். இதனை அடுத்து வந்த கிரீஸ் கெயில் ஒரு ரன்னில் வெளியேறினார். லோகேஷ் ராகுல் இருபத்தி ஒரு ரன்னில் வெளியேறினார், இந்த இருவரையும் ஒரே ஓவரில் பொல்லார்ட் ஆட்டமிழக்கச் செய்தார். இதில் ராகுலின் விக்கெட் டி 20 கிரிக்கெட்டில் பொல்லார்ட்டின் 300வது விக்கெடடாக இருந்தது. இதன் மூலமாக ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்களுக்கு மேல் எடுத்து, 300 விக்கெட்டுகளை விழுத்திய முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்திருக்கிறார்.

இதனைத்தொடர்ந்து களம் புகுந்த நிகோலஸ் பூரன் 2 ரன்னில் வெளியேறினார். நாற்பத்தி எட்டு ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து பஞ்சாப் அணி திண்டாடி வந்தது. இதன் பிறகு மார்க் ராமும் 42 ரன் தீபக் சூடா 28 ரன் என்று அணியை கவுரவமான நிலைக்குக் கொண்டு சென்றார்கள். 20 ஓவர் முடிவில் அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை சேர்த்தது மும்பை அணியின் சார்பாக பும்ரா பொல்லார்ட் உள்ளிட்டோர் தலா 2 விக்கெட்டுகளையும், ராகுல் சாகர் குர்னால் பாண்டியா உள்ளிட்டோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

இதனை அடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா 8 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் ரன் எதுவும் எடுக்காமலும் வெளியேறி அதிர்ச்சியைக் கொடுத்தார்கள். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இந்த இருவரும் ஒரே ஓவரில் ஆட்டமிழந்தார்கள். இதனையடுத்து களமிறங்கிய குயின்டன் டி காக் இருபத்தி ஏழு ரன்னிலும், சவுரப் திவாரி 45 ரன்னிலும், ஆட்டம் இழந்தார்கள்..

கடைசி நேரத்தில் மும்பை அணி சற்று சிக்கலில் இருப்பதை போன்ற ஒரு தோற்றம் உருவானாலும், ஹர்திக் பாண்டியா மற்றும் பொல்லார்ட் உள்ளிடடோர் இணைந்து தடைகளை தகர்த்து ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்கள். இந்த போட்டியில் பொல்லார்டு 15 ஹர்திக் பாண்டியா 40 ரன்னும் சேர்த்தார்கள்.

மும்பை அணி 19 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 137 ரன்களை குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது, ஹர்திக் பாண்டியா 7 ரன்னில் அவுட்டாக இருந்த கண்டம் தப்பி அது பஞ்சாப் அணிக்கு பின்னடைவாக மாறிப்போனது.

இரண்டாவது கட்ட ஐபிஎல் போட்டியில் மும்பை அணி தொடர்ச்சியாக மூன்று தோல்விக்குப் பின்னர் தற்போது முதல் வெற்றியை கைப்பற்றியிருக்கிறது. ஒட்டுமொத்தமாக ஐந்தாவது வெற்றி இது என்று சொல்லப்படுகிறது. ஏழாவது தோல்வியை சந்தித்து இருக்கும் பஞ்சாப் அணிக்கு அடுத்த சுற்றில் வாய்ப்பு கிடைப்பது கடினம் என்ற நிலையில் இருக்கிறது. இன்றைய தினம் ஆரம்பிக்கும் 43வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியும், பெங்களூரு அணியும், சந்திக்கின்றன.

Previous articleஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் பள்ளிகள் இந்த தேதியில் இருந்து செயல்படலாம்! அனுமதி வழங்கிய தமிழக அரசு!
Next articleஅடித்தால் கூட வாங்கிக் கொள்வோம் ஆனால் துரோகம் செய்தால் பொறுத்துக் கொள்ள மாட்டோம்! துரைமுருகன் பரபரப்பு பேச்சு!