அடித்தால் கூட வாங்கிக் கொள்வோம் ஆனால் துரோகம் செய்தால் பொறுத்துக் கொள்ள மாட்டோம்! துரைமுருகன் பரபரப்பு பேச்சு!

0
70

தற்போதைய தமிழக நீர்வளத்துறை அமைச்சராக இருப்பவர் துரைமுருகன், அவர் திமுகவின் பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறார், அவர் பல சமயங்களில் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது நகைச்சுவையாக பேசுவது வழக்கம் அதோடு எதுகை மோனையுடன் பேசுவார் இதனால் இவருடைய பேச்சை இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் ரசிக்கவே செய்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் திமுக சார்பாக ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உரையாற்றும்போது, இந்த தேர்தலில் அதிமுக தோல்வி பெற்றால் எதிர்வரும் லோக்சபா சட்டசபை தேர்தலில் கூட நிற்பதற்கு அவர்களுக்கு திராணி இருக்காது என கூறியிருக்கிறார்.

போட்டியிட வாய்ப்பு கேட்கப்பட்டு கிடைக்காதவர்கள் கவலைப்படத் தேவையில்லை, தேர்தல் நடந்து முடிந்த மூன்று தினங்களில் கூட்டுறவு சங்கங்கள் அனைத்தும் கலைக்கப்படும், புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள், கூட்டுறவு, சர்க்கரை ஆலை ஆவின் சங்கங்களும் கலைக்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.

உள்ளாட்சித் தேர்தலில் நம்முடைய கட்சியின் சார்பாக போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்த ஒரு சிலருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதால் அவர்கள் எந்தவிதமான கவலைக்கும் ஆளாக தேவையில்லை. உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்தவுடன் தேர்தல் முடிவு வெளியான மூன்று தினங்களில் அனைத்து சங்கங்களும் கலைக்கப்படும், இதற்கான கையெழுத்தும் போடப்பட்டு ஆகிவிட்டது என குறிப்பிட்டிருக்கிறார் துரைமுருகன்.

இது தேர்தல் சமயம் என்ற காரணத்தால், அறிவிப்பு வெளியிட இயலவில்லை சர்க்கரை பால்வளம் சங்க நிர்வாகத்தை கூட கலைக்க நேரிடலாம், அதன்பின்னர் உடனடியாக தேர்தல் நடைபெறாது. இரண்டு மூன்று ஆண்டுகள் திமுகவினர் தான் சங்கங்களை கண்காணிக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார் துரைமுருகன்.

ஆகவே தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் சங்கங்களில் பணியாற்ற வாய்ப்பு கொடுக்கப்படும் இது தேர்தல் நேரத்தில் கொடுக்கப்படும் வாய்ப்பு என்று யாரும் எடுத்துக் கொள்ள வேண்டாம். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் எங்களை அடித்தால் கூட நாங்கள் ஏற்றுக் கொள்வோம், ஆனால் துரோகம் செய்தால் யாராக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என கூறியிருக்கிறார் அமைச்சர்.

திமுக நிர்வாகிகள் அனைவரும் கட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும் கட்சிக்காக பாடுபட வேண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று யாரும் வருத்தப்பட வேண்டாம். மாவட்டச் செயலாளர், ஒன்றிய செயலாளர் மற்றும் நகர செயலாளர் இவர்களின் மூலமாக பட்டியல் பெறப்பட்டு அதன் பின்னர் அவர்களுக்கு உரிய பொறுப்பு கொடுக்கப்படும். அதே போல வாரியம் கலைக்கப்படும் தகுதியானவர்களுக்கும், கட்சிக்காக உழைப்பவர்களுக்கும் உரிய பொறுப்புகள் கொடுக்கப்படும் என்று அவர் உரையாற்றி இருக்கின்றார்.