நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜீவ்காந்தி, கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “அது ஒரு பேரின்பக் கனாக்காலம், அனைவருக்கும் நன்றி. நாம் தமிழர் கட்சியில் இருந்து நான் வெளியேறுகிறேன்” என அதிகாரப்பூர்வமாக குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, மாநில ஒருங்கிணைப்பாளர் கல்யாணசுந்தரமும் நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேராசிரியரான கல்யாண சுந்தரம் கூறியதாவது, “கட்சியில் இருந்து தான் நீக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை” எனத் தெரிவித்திருந்தார்.
ஆனால், அதற்கு முன்னமே சீமான் ஒரு பேட்டியில் கல்யாண சுந்தரத்தை கட்சியில் இருந்து நீக்கி விட்டதாக தெரிவித்துள்ளார். இதை கட்சியில் அவரது ஆதரவாளர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ள ராஜீவ்காந்தியின் விலகலுக்கான காரணம் குறித்து செய்தியாளர்கள் கேட்க முயன்றபோது, “ராஜீவ்காந்தி தரப்பிலோ, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தரப்பிலோ எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை”.
ஆனால் அதிகாரப்பூர்வமாக ராஜிவ் காந்தி தான் கட்சியில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்துள்ளார். மேலும், கட்சிக்குள் நிதிமோசடி பெருகி இருப்பதாலும், அதிகாரப் பகிர்வு மற்றும் கட்சிக்குள் ஜனநாயக தன்மை இல்லை என்பது போன்ற குற்றச்சாட்டு விமர்சனங்களால் அதிருப்தியடைந்து கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது அவர்களின் ஆதரவாளர்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கட்சியினுள் பிளவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.