TVK Vijay: இனிமேல் பாஜகவுடன் கூட்டணி இல்லை என 4 மாதங்களுக்கு முன்பு சொன்ன எடப்பாடி பழனிச்சாமி இப்போது நாங்கள் யாருடன் வேண்டுமானலும் கூட்டணி வைப்போம். எது எங்கள் விருப்பம் என சொல்லி பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துவிட்டார். அதிமுக தலைமையில் இந்திய ஜனநாயக கூட்டணி இணைந்து தமிழகத்தில் போட்டியிடும். தேசிய அளவில் மோடி தலைமையில் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் தேர்தலை நாங்கள் சந்திக்கவுள்ளோம் என அமித்ஷாவே சொல்லிவிட்டார்.
இந்நிலையில்தான் ‘கூட்டணி ஆட்சி மட்டும்தான். கூட்டணி அரசு என அமித்ஷா சொல்லவில்லை. டெல்லியில் பிரதமர் மோடி தலமையிலும் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் என அமித்ஷா தெளிவாக சொல்லியிருக்கிறார். நீங்களாக எதையும் கற்பனை செய்யகூடாது’ என அதிரடியாக பேட்டி கொடுத்தார். அதாவது நான்தான் முதல்வர்.. பாஜக சில தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் அவர்களுக்கு அமைச்சரவையில் இடம் இருக்காது என்பதைத்தான் மறைமுகமாக பழனிச்சாமி சொல்லியிருந்தார். அதிமுக எம்.பி. தம்பிதுரையும் இதை உறுதி செய்திருக்கிறார்.
ஒருபக்கம், அதிமுக – பாஜக கூட்டணியில் யாரெல்லாம் இணைவார்கள் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. சீமான் எப்படியும் தனித்தே போட்டியிடுவார். பாமக அதிமுக பக்கமா, திமுக பக்கமா என்பது பின்னர்தான் தெரியவரும். திமுகவை கடுமையாக விமர்சித்து வரும் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் யாருடன் கூட்டணி வைப்பார்கள் என தெரியவில்லை. அதிக தொகுதிகள் மற்றும் துணை முதல்வர் பதவி கேட்டதால்தான் விஜயை விட்டுவிட்டு பாஜக பக்கம் பழனிச்சாமி போனதாக சொல்கிறார்கள்.
அதேநேரம், திமுகவை தோற்கடிக்க வேண்டுமெனில் தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் இணைந்தால் மட்டுமே முடியும் என சிலர் சொல்கிறார்கள். விஜய் என்ன முடிவெடுப்பார் என தெரியவில்லை. இந்நிலையில், ஒரு செய்தி சேனலுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ‘தே.ஜ. கூட்டணிக்குள் விஜயை கொண்டு வரும் திட்டம் இப்போது இல்லை’ என சொல்லியிருக்கிறார். அதேநேரம், தேர்தல் நெருங்கும் போது எல்லாம் மாறும் என்பதால் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.