நாமக்கல் மாவட்டம் இனிமேல் முட்டைக்கு மட்டும் பேமஸ் இல்லிங்கோ!! விண்வெளி ஆராய்ச்சியிலும் தனது முத்திரையை பதித்த அற்புதம்!!
சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கிய வெற்றி நிகழ்வில் தமிழக மாவட்டமான நாமக்கல்லின் பங்கு இடம்பெற்று இருப்பதால் அந்த பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சந்திரயான் 3 தற்போது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் நிலவும் ஒரே பெயர். விண்வெளி ஆராய்ச்சியில் எங்களாலும் சாதிக்க முடியும் என்று உலக அரங்கில் இந்தியாவின் பெயரையும் புகழையும் நிலைநிறுத்த செய்த ஒரு அற்புத நிகழ்வு.
இந்தியா விண்கலத்தை ஏவ வேண்டும் எனில் மாட்டு வண்டியில் சென்று தான் ஏவ வேண்டும் என்று கேலி,கிண்டல், அவமானங்களுக்கு மத்தியில் இன்று விண்வெளி துறையில் இந்திய நாடு கோலோச்சி நிற்கிறது என்றால் தற்போதைய சந்திராயன் விண்கலத்தை நிலவின் தென் துருவத்தில் நிலை நிறுத்தியதும் ஒரு முக்கிய காரணமாகும்.
ஏராளமான தடைகளுக்கு மத்தியில் சந்திராயன் 2 தோல்வியடைந்த பாடத்தை மனதில் கொண்டு முற்றிலும் வேறுபட்ட தொழில்நுட்பத்தில் சந்திராயன் 3 விண்கலத்தின் லேன்டர் மற்றும் ரோவர் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் பெயரை நிலைநாட்டியது.
இந்த வெற்றி சாதாரணமாக கிடைத்துவிடவில்லை. இதற்காக இந்தியாவிற்கு ஏற்பட்ட சோதனைகள் ஏராளம். அதனையும் தாண்டி இன்று ரோவர் வெற்றிகரமாக நிலவில் புகைப்படங்களை எடுத்து இந்தியாவிற்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது.
விண்வெளி ஆராய்ச்சியில் முதன்மையாக திகழும் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், நாடுகளாலேயே நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்ய இயலவில்லை. இந்த சூழ்நிலையில் இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட சந்திராயன் 1 நிலவில் தண்ணீர் மூலக்கூறுகள் இருப்பதை உறுதி செய்தது.
இதனை நாசாவும் ஒத்துக் கொண்ட நிலையில் சந்திராயன் 2 அனுப்பப்பட்டது. ஆனால் சில தொழில்நுட்ப கோளாறுகளால் அதன் ரோவர் மற்றும் லேண்டெர் சிக்னலை இழந்தது. இதிலிருந்து கற்றுக் கொண்ட பாடத்தின் அடிப்படையில் சந்திராயன் 3 வடிவமைக்கப்பட்டது.
இந்த சந்திராயன் 3 விண்கலம் சோதனை ஓட்டத்திற்கு நிலவில் உள்ளது போல் மண் தேவைப்பட்டது. நிலவில் உள்ள மண்ணில் அனோர்த்தசைட் என்ற வகை தனிமம் காணப்பட்டது. ஏற்கனவே சந்திராயன்1 விண்கலத்தை நிலவிற்கு அனுப்பிய போது அதன் சோதனை ஓட்டத்திற்கு நிலவின் மேற்பரப்பில் உள்ள இந்த வகை அனோர்த்தசைட் மண் வகையை நாசாவிடமிருந்து ஒரு கிலோ மண் 150 டாலர் என்ற வகையில் இந்தியா பெற்றது.
ஆனால் சந்திராயன் 2 & 3 சோதனை ஓட்டத்திற்கு இந்த வகை மண் தமிழக மாவட்டமான நாமக்கல்லில் உள்ள குன்னமலை மற்றும் சித்தம்பூண்டி ஆகிய கிராமங்களில் இருந்து பெற்று நடத்தப்பட்டது. விஞ்ஞானிகள் இது தொடர்பாக பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தபோது இந்த வகை பாறை வகைகள் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், அருகே உள்ள சித்தம் பூண்டி, குன்னமலை கிராமங்களில் இருப்பது தெரிய வரவே அங்கிருந்து 50 டன் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பெங்களூரில் உள்ள இஸ்ரோவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அங்கு அனோர்த்தசைட்,பாறை மற்றும் மண் கொண்டு அமைக்கப்பட்ட நிலவின் தளம் போன்ற மாதிரியில் ரோவர் வாகனத்தின் ஓடுதிறன் சோதனை செய்யப்பட்டது. இந்த செய்தி அந்த கிராம மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முட்டைக்கு பெயர் பெற்ற மாவட்டமான நாமக்கல் விண்வெளி ஆராய்ச்சியிலும் தனது பங்களிப்பை அளித்துள்ளது.
இதைப்போலவே மூன்று சந்திராயன் விண்கலங்களின் வெற்றிக்கு இஞ்சின் சேம்பரில் பொருத்துவதற்காக ஐசிஎஸ்எஸ் 1218- 321 என்ற குளிரூட்டப்பட்ட ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தகடு சேலம் மாவட்டம் இரும்பாலையிலிருந்து பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.