Thalapathy vijay: நடிகரும் ரசிகர்களால் தளபதி என அழைப்படுபவருமான விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி அரசியலுக்கு வந்துவிட்டார். கடந்த பல வருடங்களாகவே அரசியலுக்குள் நுழைவவது பற்றி தனது மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் தொடர்ந்து ஆலோசனை செய்து வந்தார். ஆனால், அரசியலுக்கு வருவேன் என ரஜினியை போல சொல்லிக்கொண்டிருக்காமல் மிகவும் அமைதியாக இருந்தார்.
கோட் படத்தில் நடித்து கொண்டிருக்கும்போதுதான் இப்போது ஒத்துக்கொண்டிருக்கும் படங்களில் மட்டும் நடித்துவிட்டு தீவிர அரசியலில் ஈடுபட திட்டமிட்டிருக்கிறேன் என அறிவித்தார். அவரின் 50 சதவீத ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சி என்றாலும், இனிமேல் விஜயை திரையில் பார்கக் முடியாது என்பது மீது 50 சதவீத ரசிகர்களுக்கு சோகத்தையும் கொடுத்திருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலே விஜயின் டார்கெட்டாக இருக்கிறது.
விக்கிரவாண்டி மாநாட்டில் பேசியபோது பாஜகாவை பாசிசம் என்றும், திமுகவை பாயாசம் என்றும் நக்கலடித்தார். மேலும், திமுகவையே அதிகம் டார்கெட் செய்து பேசினார். உங்களின் ஊழல் ஆட்சியை மக்கள் முடிவுக்கு கொண்டு வருவார்கள். அதற்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என சூளுரைத்தார். அதோடு, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு கொடுப்போம் என சொன்னார்.
அதன்பின்னர் திமுகவினர் விஜயை கடுமையாக விமர்சிக்க துவங்கினார்கள். முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை தவிர மற்ற அமைச்சர்கள் விஜயை திட்டி வருகிறார்கள். தவெக கட்சி துவங்கி ஒரு வருடம் முடிந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் திமுகவை மன்னர் ஆட்சி என விமர்சித்தார். மேலும், நிதியை பெறுவதில் மாநில அரசும், மத்திய அரசும் எல்.கே.ஜி, யூ.கே.ஜி மாணவர்கள் போல ஹேஷ்டேக் போட்டு சண்டை போட்டு வருகிறார்கள் என நக்கலடித்தார்.
இந்நிலையில் திமுகவை விஜய் மன்னராட்சி என விமர்சிக்கிறாரே என செய்தியாளர்கள் நாஞ்சில் சம்பத்திடம் கேட்டபோது ‘இது மன்னர் ஆட்சியில்லை. வின்னர் ஆட்சி. தவெகவின் தலைவர் விஜயா? பிரசாந்த் கிஷோரா என்பதே தெரியவில்லை. கட்சியில் என்ன நடக்கிறது என்பதே விஜய்கு தெரியவில்லை. அவரால் கட்சி துவங்கிய இடத்திலேயே நிற்கிறது. தொடர்ந்து நிற்குமா என்பது போகப்போக தெரியவரும்’ என சொல்லியிருக்கிறார்.