ஆக்சிஜன் வாசுக்கசிவு ஏற்பட்டதால் 24 பேர் உயிரிழப்பு! உயர்மட்ட விசாரணைக்கு ஆணை!
கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் அதிகரித்து வருவதால், அவர்களுக்கு ஆக்சிஜன் கொடுப்பதும் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைக்கு வரும் பெரும்பாலானோருக்கு ஆக்சிஜன் கொடுக்கும் நிலை இருப்பதாக வடமாநிலங்களில் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள டாக்டர் ஷாஹிர் உசைன் மருத்துவமனையில், ஆக்சிஜன் டிரக்கில் இருந்து, டேங்குக்கு ஆக்சிஜனை மாற்ற முயற்சித்தனர். அப்போது, டேங்கில் இருந்த வால்வு பிரச்சனையால் ஆக்சிஜன் கசியத் தொடங்கியது.
அதனை சரிசெய்ய ஊழியர்கள் முயற்சித்த போதும், ஆக்சிஜன் அனைத்தும் வெளியேறி வீணானது. இதனால் ஏற்பட்ட ஆக்சிஜன் தட்டுப்பாட்டால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 24 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
#WATCH | An Oxygen tanker leaked while tankers were being filled at Dr Zakir Hussain Hospital in Nashik, Maharashtra. Officials are present at the spot, operation to contain the leak is underway. Details awaited. pic.twitter.com/zsxnJscmBp
— ANI (@ANI) April 21, 2021
அவர்களில் 13 பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்றும், மற்றவர்கள் 33 வயதில் இருந்து 60 வயதிற்கு உட்பட்டவர்கள் என்றும், இதில் 12 பேர் பெண்கள் என்றும் மருத்துவனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த மருத்துவனையில் ஆக்சிஜன் பெற்று சிகிச்சை பெற்ற 150 பேர் வேறு ஒரு கொரோனா சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
வாயுக்கசிவு ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து 7 பேர் கொண்ட உயர்மட்ட விசாரணைக்கு அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஆணையிட்டுள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.